Published : 15 Apr 2024 04:10 AM
Last Updated : 15 Apr 2024 04:10 AM
விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து நேற்று மாலை விக்கிரவாண்டியில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தலாகும் இதில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள பெண்கள், திமுகவின் மீது கோபமாக உள்ளனர். கடந்த 57 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட திமுக, அதிமுக கட்சிகள் நாட்டில் உள்ளவர்களை மது பழக்கத்துக்கு அடிமையாக்கி விட்டன. தமிழ்நாட்டில் கஞ்சா, அபின் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி, பல குடும்பத்தினரின் வாழ்க்கையை நாசப்படுத்தி உள்ளனர். கடந்த எம்.பி தேர்தலில் மிகப்பெரிய தவறு செய்துள்ளீர்கள். இந்த தொகுதியில் வெற்றி பெற்றுச் சென்ற எம்.பி ரவிக்குமார் தொகுதியை மீண்டும் எட்டி பார்த்தாரா? தொகுதிக்காக ஏதாவது செய்தாரா? இதையெல்லாம் எண்ணிப் பாருங்கள்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தராமல் இரு திராவிட கட்சிகளும் ஏமாற்றியுள்ளன. தேர்தல் வந்தால் தான் வன்னியர்களைப் பற்றியும், தலித் மக்களை பற்றியும் திமுக நினைக்கிறது. ‘மாமன்னன்’ படத்தில் நடித்தால் மட்டும் போதுமா? பட்டியல் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டாமா? தமிழ்நாட்டில் 34 அமைச்சர்கள் பதவியில் உள்ளனர் அதில் அமைச்சர் முன்னுரிமையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 30வது இடத்தில் கணேசன், 33வது இடத்தில் மதிவேந்தன், 34 வது இடத்தில் கயல்விழி செல்வராஜ் இருக்கின்றனர்.
இதுதான் நீங்கள் தலித் சமுதாயத்துக்கு கொடுக்கும் மரியாதையா? வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சினையில் அதிமுக அரசு அரை குறையாக சட்டம் போட்டு, ஏமாற்றி விட்டது. திட்ட மிட்டு செய்துள்ளார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போது தமிழ்நாட்டினுடைய நேரடி கடன் 4 லட்சம் கோடி ரூபாய். ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளில் இன்று தமிழ்நாட்டினுடைய கடன் 8.5 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. சமீபத்தில் 1.55 ஆயிரம் கோடி கடன் வாங்கி, அதில் 55,000 கோடியை பழைய கடனுக்கு வட்டி கட்டியுள்ளனர்.
இதுதான் நிர்வாக திறமையா? திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் கமிஷன் வாங்கிக் கொண்டு தான் வேலை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளையும் ஓரங்கட்ட வேண்டும். நாட்டில் 7 மாநிலங்களில், அரசு ஊழியர்களுக்கு பழையஓய்வூதிய திட்டத்தை நடை முறைக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்களால் செய்ய முடிந்ததை திமுக அரசால் ஏன் செய்ய முடிய வில்லை. அரசு ஊழியர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
இதுவரையில் தமிழக மக்கள் இரு கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுத்தது போதும். இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள். இந்த வெற்றியைத் தொடர்ந்து, வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி அமைத்து, அந்தத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம். இரண்டு திராவிட கட்சிகள் இல்லாத கூட்டணி ஆட்சியை அமைப்போம் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்துக்கு பாமக மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்எல்ஏ தலைமை தாங்கினார். வடக்கு மாவட்டத் தலைவர் புகழேந்தி, பாஜக மாநில துணைத்தலைவர் சம்பத், பாமக மாவட்ட தலைவர் தங்க ஜோதி, மாநில வன்னியர் சங்க துணை தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT