

கரூர்: திமுகவுக்கு மாற்று தமிழகத்தில் பாஜக மட்டுமே என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கரூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து, கரூர் வேலுசாமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து பேசியது: கடந்த 10 ஆண்டு காலமாக பாஜக அரசு மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. பிரதமர் மோடி இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறார். பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் 2.23 லட்சம் வீடுகளுக்கு மேல் குழாய் மூலம் குடிநீர் வழங்குகிறார். இளைஞர்கள் சொந்த காலில் நின்று சம்பாதிக்க வேண்டும் என திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. கரூர் மக்களவைத் தொகுதியில் தமிழக பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவரை தேர்ந்தெடுங்கள். தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கு இதுவே தகுந்த தருணம். திமுகவுக்கு மாற்று தமிழகத்தில் பாஜக மட்டுமே. எனவே, கரூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.