Published : 15 Apr 2024 04:06 AM
Last Updated : 15 Apr 2024 04:06 AM

திருச்செந்தூரில் வெளுத்து வாங்கிய கோடை மழை

திருச்செந்தூரில் நேற்று பெய்த திடீர் கோடை மழையால் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கும் பகத்சிங் பேருந்து நிலையம்.

தூத்துக்குடி: கடும் வெயில் தாக்கத்துக்கு இடையே திருச்செந்தூர் பகுதியில் நேற்று கோடை மழை வெளுத்து வாங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளான வீரபாண்டியன் பட்டினம், ஆறுமுக நேரி, ஆலந்தலை, கல்லா மொழி, உடன்குடி, பரமன் குறிச்சி, காயா மொழி, தளவாய் புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மிதமான மழை பெய்தது.

திருச்செந்தூரில் நேற்று பகல் சுமார் 2 மணி நேரம் இடியுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழையால் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம், காமராஜர் சாலை, ரதவீதிகள், டிபி சாலை, கோயில் பகுதி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் திடீரென கனமழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த மழையால் தளவாய் புரம் - ஊத்தாங்கரை விளை இடையே உள்ள வாய்க்காங்கரை சாலையில் மேச்சலுக்காக சென்ற ஊத்தாங்கரை விளையை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பசுமாடு மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அந்த மாடு உயிரிழந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x