அடுக்குமாடி குடியிருப்பு வாக்காளர்களுடன் தமிழிசை ஜூம் மீட்: எதிர்க்கட்சியினரின் செயலால் விரக்தி

தமிழிசை | கோப்புப்படம்
தமிழிசை | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார் தமிழிசை சவுந்தரராஜன். இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாக்காளர்களுடன் கலந்துரையாடும் வகையில் அவரது தரப்பில் ஜூம் மீட் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த இணையவழி சந்திப்புக் கூட்டத்தில் சிலரது அதிர்ச்சிகரமான செயல் காரணமாக அதில் பங்கேற்றவர்களுக்கு மோசமான அனுபவம் கிடைத்ததாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தமிழிசை. அது குறித்து சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்தது.

“அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாக்காளர்களிடத்தில் எனக்கு ஆதரவு தருமாறு கேட்க திட்டமிட்டேன். அவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை அதனால் இணையவழியில் சந்திக்கும் வகையில் ஜூம் (Zoom) மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் முடிவு செய்திருந்தேன். அது குறித்தும் முன்கூட்டியே தெரிவித்திருந்தோம். இதில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

மீட்டிங் தொடங்கிய சில நிமிடங்களில் ஆபாசமான படங்கள் அதில் பகிரப்பட்டன. இதன் மூலம் வேட்பாளரும், வாக்களர்களுக்கும் இடையிலான இணைப்பை துண்டிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்காத வகையிலும், நான் தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்கக்கூடாது என்ற மோசமான நோக்கிலும் எதிர்க்கட்சியனர் இதை செய்தனர்.

குறிப்பாக தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக-வை இதற்கு நான் நேரடியாக குற்றம் சுமத்துகிறேன். இது கேவலமான அரசியல். இதன் மூலம் எங்களுக்கும், மக்களுக்குமான தொடர்பை துண்டிக்க முடியாது.

பெண்கள் இணைவெளியில் சுதந்திரமாக தமிழகத்தில் பேசக்கூட முடியவில்லை. இதை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும். அரசியலை தூய்மை படுத்த நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். நேர்மையான அரசியல் செய்வது அவசியம். இந்த அதிர்ச்சிகர செயலுக்கு நான் வருந்துகிறேன். நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்து இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என தமிழிசை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in