Last Updated : 14 Apr, 2024 10:21 PM

3  

Published : 14 Apr 2024 10:21 PM
Last Updated : 14 Apr 2024 10:21 PM

‘எய்ம்ஸ் வேண்டி ஒற்றை செங்கல் சுமக்கும் உதயநிதி பல லட்சம் செங்கற்களால் கட்டப்பட்ட கால்நடை பூங்காவை திறக்காதது ஏன்?’ - இபிஸ் கேள்வி

கோப்புப்படம்

சேலம்: எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று ஒற்றை செங்கல்லை தூக்கிக் கொண்டு பிரச்சாரம் செய்யும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் பல லட்சம் செங்கற்களால் கட்டப்பட்ட தலைவாசல் கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவை 3 ஆண்டுகளாக திறக்காமல் பூட்டி வைத்திருப்பது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியது:

“ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் எங்கு சென்றாலும் என்னைப் பற்றி அவதூறாக பேசுகிறார். அதிமுக தெய்வ சக்தி படைத்த கட்சி. ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி. சில பேர், கட்சிக்கு வந்தே 5 ஆண்டுகள் தான் ஆகிறது. அவர்கள் அதிமுக-வை அழிப்போம் என்கிறார்கள். அவரை போல பலரை பார்த்துவிட்டோம். அதிமுக-வை அழிக்க நினைத்தவர்கள் தான், அழிந்து போயிருக்கின்றனர். அதிமுக-வை அழிக்க, இந்த பூமியில் எவரும் பிறக்கவில்லை.

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் என்னைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றி சில விவரங்களை கூறுகிறேன். ஸ்டாலின் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது தான், அந்த ஆலையை 86 ஏக்கரில் ரூ.1,500 கோடியில் விரிவாக்கம் செய்ய அனுமதியளித்தார்.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலை உரிமத்தை புதுப்பிக்க, மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதிக்காக வந்தபோது, அந்த அனுமதியை வழங்காமல் அதிமுக ஆட்சியில் தான் நிறுத்தி வைத்தோம். தூத்துக்குடியில் கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததால், மாவட்டம் முழுவதும் 144 தடையுத்தரவை பிறப்பித்திருந்தோம். ஆனால், திமுக எம்எல்ஏ, அப்பாவி மக்களை தூண்டிவிட்டு, ஊர்வலம் நடத்தி, அசம்பாவிதம் ஏற்பட காரணமாக இருந்தார்.

1982-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, விவசாயிகள் 1 யூனிட் மின்சாரத்துக்கு, ஒரு பைசா கட்டணம் குறைக்க வலியுறுத்தி போராடினர். அப்போது, ஆத்தூரை அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம், கோவை பெருமாநல்லூர் உள்பட தமிழகத்தில் போராடிய விவசாயிகள் 14 பேரை திமுக அரசு சுட்டு வீழ்த்தியது. பெருமாநல்லூர், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள நினைவுச் சின்னங்களே அதற்கு சாட்சி.

திமுக ஆட்சிக் காலத்தில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில், கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்கள் மீது, திமுக அரசு தாக்குதல் நடத்தியபோது, போலீஸாரிடம் இருந்து தப்பிக்க, தாமிரபரணி ஆற்றில் குதித்து 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இப்படிப்பட்ட திமுக கட்சி, வேண்டுமென்றெ அதிமுக மீது அவதூறு பிரச்சாரத்தை நடத்துகின்றது.

நீட் தேர்வு எடப்பாடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்று கூறுகின்றனர். 2010-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, அதில் திமுக அங்கம் வகித்தது. திமுக-வை சேர்ந்த காந்தி செல்வன், சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார். அப்போது தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், எங்கள் மீது பழிபோட்டு திமுக தப்பிக்கப் பார்க்கிறது.

தமிழகத்தில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், 3,145 மருத்துவ கல்வி இடங்களுக்கு, அரசுப் பள்ளி மாணவர்கள் 9 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்தது. எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன். இன்றைக்கு 4 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2,160 மாணவர்கள், மருத்துவம், பல் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

ஒற்றை செங்கல்லை வைத்துக் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக-வைச் சேர்ந்த 38 பேர் எம்பி-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் பதவியில் இருந்தனர். அவர்கள் மத்திய அரசிடம் நிதி கேட்டு, நாடாளுமன்றத்தை முடக்கி இருந்தால், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டிருக்கும். அதை ஏன் திமுக-வினர் செய்யவில்லை.

அதிமுக அரசு, பல லட்சம் செங்கற்களைக் கொண்டு, தலைவாசலில் ரூ.1,200 கோடியில், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவை கட்டியது. அதனை திமுக அரசு ஏன் 3 ஆண்டுகளாக திறக்கவில்லை. அதை திறந்து வைத்திருந்தால், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பயனடைந்திருப்பார்களே, இந்த கெங்கவல்லி தொகுதி உலக அளவில் புகழ் பெற்றிருக்குமே. இதை ஏன் திமுக அரசு செய்யவில்லை. 2026-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், தலைவாசல் கால்நடை பூங்காவை திறந்து வைப்போம்.

நெல், கரும்பு ஆகியவற்றுக்கான ஆதார விலையை உயர்த்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு அதனை நிறைவேற்றவில்லை. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

திமுக அரசு கொடுத்த பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். பொங்கல் தொகுப்பு வழங்கியதில் கூட ரூ.500 கோடி ஊழல் செய்ததாக செய்திகள் வெளியாகின. ஒற்றை விரலால், ஓங்கி அடிப்போம், திமுக ஆட்சியை விரட்டுவோம். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன், அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்பட அதிமுக-வினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x