புதுச்சேரி: துறவறம் ஏற்க 13 வயது சிறுவன் ஆன்மிக ஊர்வலம் - அகமதாபாத்தில் தீட்சை

புதுச்சேரி: துறவறம் ஏற்க 13 வயது சிறுவன் ஆன்மிக ஊர்வலம் - அகமதாபாத்தில் தீட்சை
Updated on
1 min read

புதுச்சேரி: ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த புதுச்சேரி தொழிலதிபரின் 13 வயது மகன் துறவறம் மேற்கொள்ளவுள்ளதால் ஆன்மிக ஊர்வலம், பூஜை இன்று நடந்தது. இச்சிறுவனுக்கு அகமதாபாத்தில் தீட்சை தரப்படவுள்ளது.

புதுச்சேரியில் வடநாட்டில் இருந்து வந்து தொழில் புரியும் ஜெயின் சமூகத்தினர் அதிகளவில் உள்ளனர். அவர்கள் குடும்பத்தில் இளையோர் தங்கள் சமூக கருத்துகளை பின்பற்றி துறவறம் பின்பற்றும் வைபங்களும் இங்கு நடப்பது வழக்கம். இந்நிலையில் புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் விகாஷ் சம்தர்யா, பிரியகா சம்தர்யா தம்பதியின் இளைய மகன் ஹார்திக் (13) துறவறம் மேற்கொள்ள முன்வந்துள்ளார்.

ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட இக்குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கு முன்பாக புதுச்சேரிக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஜெயின் சமூகத்திலுள்ள கருத்துகளில் ஆர்வம் கொண்ட இத்தம்பதியின் இளைய மகன் துறவறம் பூண முன்வந்ததை இக்குடும்பத்தினர் ஏற்றனர். அதையடுத்து புதுச்சேரி சித்தன்குடியிலுள்ள ஜெயின் கோயிலில் இருந்து ஆன்மிக ஊர்வலம் இன்று நடைபெற்றது. தேர் போன்ற அமைப்பில் ஹார்திக் தனது சகோதரியுடன் அமரவைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

ஊர்வலமானது புதுச்சேரி காமராஜர் சாலை, அண்ணாசாலை வழியாக செட்டித் தெருவில் உள்ள திகம்பரர் கோயிலை அடைந்தது. அதன்பின் கொசக்கடைத் தெருவில் உள்ள திகம்பரர் ஜெயின் கோயிலில் பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வை அடுத்து அகமாதாபாத் புறப்பட்டு செல்லும் இவர்கள், அங்குள்ள புகழ்பெற்ற ஜெயின் கோயிலில் துறவற பூஜையில் பங்கேற்கின்றனர். அதைத்தொடர்ந்து வரும் 28-ல் ஹார்திக்கு தீட்சிதை அளிக்கப்படும் என ஜெயின் சமூக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in