Published : 14 Apr 2024 09:32 AM
Last Updated : 14 Apr 2024 09:32 AM

வாக்குறுதிகளை வாரி வழங்கும் வட சென்னை வேட்பாளர்கள் - ஒரு பார்வை

படங்கள்: ம.பிரபு

சென்னை: வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வட சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சுட்டெரிக்கும் வெயிலையும் மிஞ்சி அனல் பறக்கிறது.

கலாநிதி வீராசாமி ( திமுக ): திமுகவில் முக்கிய தலைவர்களின் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், முதல்வரின் வருகைக்காக வட சென்னையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டிவரும் நிலையில், களத்தை தங்களுக்கு சாதகமாக வைத்திருக்கும் வகையில் தீவிர பிரச்சாரத்தை வேட்பாளர் கலாநிதி அணியினர் செய்து வருகின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை வழங்கியதை முக்கியமாக முன்வைப்பதால், செல்லும் இடமெல்லாம் பெண்களின் அணிவகுப்புக்கு இடையே பிரச்சாரம் செய்கின்றனர். அணி திரளும் பெண்களிடம் கருப்புசிவப்பு நிற பலூன்கள், உதயசூரியன் சின்னத்தில் விசிறி, துண்டு பிரசுரங்கள் போன்றவற்றை வழங்கி வீதி வீதியாகப் பயணிக்கின்றனர். மேலும், பட்டா பிரச்சினைக்குத் தீர்வு, வடசென்னைக்கு தனி மாசு கட்டுப்பாட்டு வாரியம், எண்ணூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார் கலாநிதி வீராசாமி.

ராயபுரம் மனோ ( அதிமுக ): அதிமுக சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோ, பெரம்பூர், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், கொளத்தூர், ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து காலை, மாலை வேளைகளில், ‘நாசிக் டோல்’ மேள தாளங்களுடன் உற்சாகமாக வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்துக்கான ஏற்பாடுகள் மற்றும் வாக்குசேகரிக்கும் பணியில் மாவட்டச் செயலாளர்கள் டி.ஜெயக்குமார், மாதவரம் மூர்த்தி, டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கொளத்தூரிலும், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆர்.கே.நகரிலும், நடிகை விந்தியா பெரம்பூரிலும், நடிகை கவுதமி திருவொற்றியூரிலும் வாக்கு சேகரித்துள்ளனர். வரும் 16-ம் தேதி மனோ, தனது பிரச்சாரத்தை கொளத்தூரில் நிறைவு செய்கிறார். 17-ம் தேதி தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு கோர திட்டமிட்டுள்ளார். வடசென்னையில் ரயில்வேமுனையம், எய்ம்ஸ் மருத்துவமனை, உலக தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை கூறி பிரச்சாரம் செய்துவருகிறார் ராயபுரம் மனோ.

ஆர்.சி. பால்கனகராஜ் ( பாஜக ): பாஜக வேட்பாளர் பால்கனகராஜுக்கு ஆதரவாக ஏற்கெனவே அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கூட்டணிக் கட்சியான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பிரச்சாரம் செய்து விட்டுச்சென்ற நிலையில், பிரதமர் மோடியும் கடந்த வாரம் சென்னையில் ரோடு ஷோ மூலம் ஆதரவு திரட்டினார். இதனால், பால் கனகராஜ் உற்சாகத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரதமரின் உஜ்வாலா திட்டம், முத்ரா திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மக்கள் பயன் அடைந்து வருவதைக் குறிப்பிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக எம்.பி. தொகுதிக்கு எதுவும் செய்யாமல் 5 ஆண்டுகளை வீணடித்து விட்டார். எனவே, மீண்டும் அந்த நிலை தொடராத வகையில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறவைக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவேன் எனக் கூறி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் பால்.கனகராஜ்.

மருத்துவர் அமுதினி ( நாதக ): நாம் தமிழர் கட்சி சார்பில் களத்தில் இருக்கும் வேட்பாளர் மருத்துவர் அமுதினிக்காக கட்சியினர் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர் ஒருபுறம்,மற்றொருபுறம் கட்சியினர், வீடுவீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். மக்களுடனான சந்திப்பின்போது, வெள்ளப் பாதிப்பில் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை அடுக்குகின்றனர். இதன்மூலம், அதிருப்தியாளர்களின் வாக்குகளைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சிறு, சிறு தெருக்களிலும் சீமானின் பாடல்கள், அவரது பேச்சு, முக்கிய பேச்சாளர்களின் உரை போன்றவற்றை ஒலிபரப்பி மக்களைக் கவர்ந்து வருகின்றனர். மைக் சின்னம் இறுதி நேரத்தில் கிடைத்தாலும் அது மக்களிடையே சென்று சேர்ந்து விட்டதாக நம்பிக்கை தெரிவிக் கின்றனர். இவ்வாறாக, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கிதீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x