Published : 14 Apr 2024 05:22 AM
Last Updated : 14 Apr 2024 05:22 AM
சென்னை: சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள், சொத்து விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித் துள்ளது.
உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதை பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) போலீஸார் டெல்லியில் கடந்த பிப்.24-ம் தேதி கைது செய்தனர்.
இதற்கு மூளையாகச் செயல்பட்ட சினிமா தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக்கையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாபர் சாதிக்கின் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், அவரது நண்பரும், தமிழ் திரைப்பட இயக்குநருமான அமீருக்கு சம்மன் அளிக்கப்பட்டு, டெல்லியில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கான வங்கி பரிவர்த்தனை, வாங்கப்பட்ட சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்களுடன் டெல்லியில் உள்ள என்சிபி அலுவலகத்தில் கடந்த 5-ம் தேதி ஆஜராகுமாறு அமீருக்கு என்சிபி போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், விசாரணைக்கு ஆஜராக அவகாசம் தருமாறு என்சிபி பிரிவுக்கு அமீர் வேண்டுகோள் விடுத்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையே, போதை பொருள்கடத்தல் விவகாரத்தில் சட்டவிரோதபண பரிமாற்றம் நடந்திருப்பதாக வும் தெரியவந்ததால், இதுதொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, சேத்துப்பட்டில் உள்ள அமீர் வீடு, தி.நகரில் உள்ள அலுவலகம், சாஸ்திரி நகரில் உள்ள பிரபல ஓட்டல் உரிமையாளரின் வீடு, அலுவலகம், பெரம்பூரில் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய 3 பேரின் வீடு, புரசைவாக்கத்தில் உள்ள ஒருஓட்டல் என ஒரே நாளில், சென்னை, மதுரை, திருச்சியில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 9-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட் டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை தனது எக்ஸ் தளத்தில், ‘‘சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜாபர் சாதிக் மற்றும் அவர் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கடந்த 9-ம் தேதிசோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது, பல்வேறு குற்றஆவணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை என்னென்ன ஆவணங்கள் என்பதை அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT