Published : 14 Apr 2024 04:56 AM
Last Updated : 14 Apr 2024 04:56 AM
திருச்சி: திருச்சி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் உறவினர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சியை அடுத்த எட்டரை கீழத் தெருவில் அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதியின் உறவினரும், ஊராட்சி மன்றத் தலைவியுமான திவ்யா வீட்டில் பறக்கும்படையினர் நேற்று முன்தினம்நடத்திய சோதனையில் ரூ.1 கோடிபணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக திவ்யா, அவரது கணவர் அன்பரசு ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா.பிரதீப்குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘எட்டரை கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவி வீட்டில் ரூ.1கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.
3 பேர் மீது வழக்கு பதிவு: முன்னதாக, திருச்சி மாவட்டம் முசிறி பெரியார் பாலம் அருகேபோலீஸார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாகவந்த 2 கார்களை மறித்து சோதனை செய்தனர்.
அந்தக் கார்களில் இருந்த அன்பரசு, ஆலத்தூரைச் சேர்ந்த சிவபிரகாசம்(50), பிரதாப்(41) ஆகியோர் போலீஸாரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முசிறி போலீஸார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT