Published : 08 Apr 2018 03:39 PM
Last Updated : 08 Apr 2018 03:39 PM

12-ம் தேதி சென்னை வரும் மோடிக்கு கண்டனம்; வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, கருப்புச் சட்டை அணிய வேண்டும்: தமிழக மக்களுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரும் 12-ம் தேதி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணியுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக திமுக, திராவிடர் கழகம், தமிழக காங்கிரஸ் கமிட்டி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் அவர்கள் கூறியதாவது:

''உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது, காலம் தாழ்த்தியது மட்டுமல்லாமல், தீர்ப்பையே புறக்கணித்திருப்பதைக் கண்டித்து, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக் கொடி காட்டப்படும் என்று 1.4.2018 அன்று திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில், 12.4.2018 வியாழன் அன்று சென்னை வரவிருக்கும் பிரதமருக்கு அனைத்துக் கட்சித் தோழர்களும் கருப்புக் கொடி காட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த ஆறு வருடங்களாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததால், விவசாயம் பாழ்பட்டுப்போய் விவசாயிகள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி, தமிழ்நாட்டில் காவிரி நீரை ஆதாரமாக நம்பியிருக்கும் 13-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பாதிக்கப்பட்டு, பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களின் மக்களுக்குக் குடிதண்ணீர்ப் பிரச்சினை பெரிதாக உருவாகும் சூழ்நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், மூன்று மாத கால அவகாசம் கேட்டு, தீர்ப்பை கிடப்பில் போடுவதற்கான சந்தேகங்களை எழுப்பிவிட்டு தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர்.

இந்த சர்வாதிகாரக் கொடுமையைத் தட்டிக்கேட்க துணிச்சல் இல்லாமல், பதவி ஒன்றே வாழ்க்கைப் பயன் என்று தூங்கிக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் உள்ள அதிமுக அரசு. தமிழகத்தின் காவிரி உரிமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடியான நேரத்தில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்களது ஆழமான அதிருப்தியையும் ஒன்றுபட்ட எதிர்ப்பையும் பிரதமருக்குத் தெளிவுபட உணர்த்திடும் வண்ணம் தங்கள் இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்றியும், ஒவ்வொருவரும் கருப்புச்சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்தும் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை என்ன விலை கொடுத்தேனும் மீட்கும் இந்த உறுதியான போராட்டத்தில் முழு மூச்சுடன் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நம் உணர்வுகளை மத்திய பாஜக அரசுக்கு முழுமையாக வெளிப்படுத்திட வேண்டிய மிக முக்கியமான தருணம் இது என்பதை உணர்ந்து கட்சி வேறுபாடு பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் உத்வேகத்துடன் இந்த கருப்புக் கொடி போராட்டத்தில் தவறாமல் பங்கேற்றிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.''

இவ்வாறு அனைத்துக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x