Published : 25 Apr 2018 08:59 AM
Last Updated : 25 Apr 2018 08:59 AM

தமிழக பல்கலைக்கழகங்களின் தரவரிசை கட்டமைப்பு உருவாக்கம்: தனியார் நிறுவனத்துடன் உயர்கல்வித் துறை ஒப்பந்தம்

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 9 பல்கலைக்கழகங்கள் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்புக்கு தகுதி பெற்று விண்ணப்பித்தன. 2018-ம் ஆண்டுக்கான தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பில் அண்ணா, பாரதியார், அழகப்பா, காமராசர், பாரதிதாசன், பெரியார் ஆகிய 7 பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களில் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், கல்வி நிறுவனங்களின் தரவரிசைக்கான இந்திய மையம் (ஐ கேர்) என்ற தனியார் நிறுவனம், உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 13 பல்கலைக்கழகங்களில் மதிப்பீடு, தரவரிசை குறித்த கட்டமைப்பை கட்டணமின்றி உருவாக்க முன்வந்துள்ளது.

இதன் அடிப்படையில், ஐ கேர் நிறுவனத்துடன் தமிழக உயர்கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் சார்பில் அதன் துணைத் தலைவர் (பொறுப்பு) சுனில் பாலிவால், தனியார் நிறுவனத்தின் சார்பில் அதன் துணைத் தலைவர் கார்த்திக் ஸ்ரீதர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x