பிரதமர் மோடி 15-ம் தேதி பிரச்சாரம்: அம்பையில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

பிரதமர் மோடி 15-ம் தேதி பிரச்சாரம்: அம்பையில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு கேட்டு அம்பாசமுத்திரத்தில் வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசவுள்ளார். இதையொட்டி 2 நாட்களுக்கு அங்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுமுன் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியிருந்தார். இந்நிலையில் 2-வது முறையாக திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் பகுதிக்கு பிரதமர் 15-ம் தேதி வரவுள்ளார்.

மாலை 4.15 மணிக்கு அம்பாசமுத்திரத்தில் நடைபெறும் இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமர் வருகையை முன்னிட்டு இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டியில் உள்ள மைதானத்தில் நாளை மக்களவை தேர்தல் தொடர்பாக பிரச்சாரம் செய்ய பிரதமர் வருகை தருகிறார்.

இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக வாகன தணிக்கை, தங்கும் விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பிரதமர் கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ளவரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்றும், நாளையும் அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டி பகுதியை சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவிற்கு பாதுகாக்கபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுகிறது. மேலும் இதனால் அங்கு எவ்விதமான டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in