

உதகை: தேர்தல் அலுவலர்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் ஒரு சார்பு இல்லாமலும் செயல்பட வேண்டும் என்று, நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன், உதகை, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய பகுதிகளில், தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக மேட்டுப்பாளையம், அவிநாசி பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்து நேற்று உதகை வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் மோடி மேட்டுப்பாளையத்துக்கு வந்து சென்ற பிறகு, 100 சதவீதம்வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேநீர் விற்பவரின் மகனாக இங்கு வந்து சென்றது, வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. தேயிலைக்கு உரிய விலையை தருவோம். நீலகிரி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள மக்கள் ஆ.ராசாவுக்கு எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.பிரச்சாரத்துக்கு ஆ.ராசா செல்லும்போது, கிராமத்துக்குள் வர வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வெளியே அனுப்புகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக நீலகிரி தொகுதியை மேம்படுத்த ஆ.ராசா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சனாதனம் குறித்து பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை. கடவுள்கள் குறித்து ஆ.ராசா தவறாக பேசுகிறார். அவர் ஒரு பிரிவினைவாதி. இது தர்மத்துக்கும், அதர்மத்துக்குமான தேர்தல். இந்த தேர்தல் ஊழலுக்கு எதிரான தேர்தல்.
2009-ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசா, அவருடைய வாக்காளர் அடையாள அட்டையைகூட இதுவரை நீலகிரி தொகுதிக்கு மாற்றவில்லை. சமூக நீதி குறித்து பேச மு.க.ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோருக்கு தகுதி கிடையாது. தனித் தொகுதிகளில் போட்டியிட எந்த அருந்ததியினருக்கும் திமுக வாய்ப்பு தரவில்லை.
நீலகிரி தொகுதியில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள்போல் தேர்தல் அலுவலர்கள்செயல்படுகின்றனர். எனவே,தேர்தல் அலுவலர்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் ஒரு சார்பு இல்லாமலும் செயல்பட வேண்டும். பாஜகவை குறை சொல்ல சிறு காரணம்கூட இல்லை. அந்த அளவுக்கு கடந்த10 ஆண்டுகளாக பாரத பிரதமர்தூய்மையான அரசியலை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.