

இந்த தேசத்துக்கு வேண்டாம் மோடி என தருமபுரியில் நேற்று நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பேசினார்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் இண்டியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆ.மணிக்கு ஆதரவு கோரி திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் நேற்று இரவு தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி சாலையில் உள்ள சவுளுப்பட்டி மற்றும் நல்லம்பள்ளி, சிவாடி ஆகிய இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது: இந்த தேசத்துக்கு வேண்டாம் மோடி. ஏனெனில், தமிழகம் தருகின்ற வரியை மத்திய அரசு முழுமையாக தமிழகத்துக்கு திருப்பித் தருவதில்லை. தமிழகம் தரும் ஒரு ரூபாயில் 29 பைசாவை மட்டுமே மத்திய அரசு திருப்பித் தரும்போதும் தமிழக முதல்வர் தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
எனில், தமிழகம் தரும் வரியை முழுமையாக அப்படியே தமிழகத்துக்கு மத்திய அரசு திருப்பிக் கொடுத்தால் தமிழக மக்கள் நலனை முதல்வர் இன்னும் சிறப்பாகக் காப்பார்.
மோடியிடம் இருந்து தேசத்தை காக்க இண்டியா கூட்டணியினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக வேட்பாளர் போட்டியிடுகிறார். பாமக முன்பு அதிமுக-வுடன் கூட்டணியில் இருந்தது. தற்போது பாஜக-வுடன் கூட்டணியில் உள்ளது.
இவ்வாறு மாறிமாறி கூட்டணி அமைக்கும் பாமக-வை நிராகரிக்க வேண்டும்.
இண்டியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் சங்கர், சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.