

சென்னை: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை திருவான்மியூர் கடற்கரையில் பாரா செய்லிங்கில் பறந்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் திருவான்மியூர் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதில் பாரா செய்லிங் மூலம் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வண்ண பலூன்களை விண்ணில் பறக்கவிட்டு, பாரா செய்லிங் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பின்னர், ரிப்பன் மாளிகை வளாகக் கூட்ட அரங்கில் சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து, அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாம் 100 சதவீதம் வாக்களிப்போம்’ என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்க நடமாடும் வாகனத்தை ராதாகிருஷ்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில் தேர்தல் பொது பார்வையாளர்கள் கார்த்திகேய் தன்ஜி புத்தப்பாட்டி, டி.சுரேஷ், முத்தாடா ரவிச்சந்திரா, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆர்.லலிதா, ஷரண்யா ஹரி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எம்.பி.அமித், கே.ஜெ.பிரவீன் குமார், கட்டா ரவி தேஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் சீ.குமார், கதிர்வேலு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.