Published : 13 Apr 2024 05:53 AM
Last Updated : 13 Apr 2024 05:53 AM

ஓட்டுநர் உரிமங்களை விரைவு தபால்கள் மூலம் அனுப்பும் திட்டம்: ஒரு மாதத்தில் 3.99 லட்சம் தபால்கள் விநியோகம்

சென்னை: ஓட்டுநர் உரிமங்களை விரைவு தபால்கள் மூலம் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்ட ஒரு மாதத்தில் 3.99 லட்சம் தபால்களை அஞ்சல் துறை விநியோகம் செய்துள்ளது.

ஓட்டுநர் உரிமங்களை விரைவு தபால் மூலம் அனுப்புவதற்காக, தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் அலுவகத்துடன், தமிழ்நாடு அஞ்சல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

162 ஆர்டிஓ அலுவலகம்: இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் உள்ள 162 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம்வழங்கப்படும் ஓட்டுநர் உரிமங்கள் விரைவு தபால் மூலமாக ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பித்த சம்பந்தப்பட்ட நபரின் முகவரிக்கு கொண்டு சென்று விநியோகிக்கப்படுகிறது.

இதற்காக, அஞ்சல் துறை மூலம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு தினசரி நேரில் சென்று ஓட்டுநர் உரிமங்களை சேகரித்து அருகில் உள்ள அஞ்சலகங்களுக்கு கொண்டு சென்று அங்கிருந்து விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தபால்காரர் இந்த விரைவு தபால்களை அன்றைய தினமே சம்பந்தப்பட்ட முகவரிக்கு கொண்டு சென்று விநியோகம் செய்வார்.

7 நாட்களில்.. முகவரி மாற்றம், வீட்டில் ஆளில்லாமல் இருத்தல் போன்ற காரணங்களால் விரைவு தபால் 7 நாட்கள் வரை சம்பந்தப்பட்ட அஞ்சலகங்களில் வைத்திருந்து விநியோகம் செய்யப்படுகிறது. ஒருவேளை அந்த 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர் அஞ்சலகத்தைத் தொடர்பு கொண்டு தபாலை பெற்றுக் கொள்ளவில்லை என்றால், அவை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு திருப்பி அனுப்பப்படும்.

மேலும், இந்த விரைவு தபால் விநியோகம் செய்யப்படும் விவரம்குறித்து சம்பந்தப்பட்ட நபரின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் முன்கூட்டியே தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த 8-ம் தேதி வரை 4.02 லட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பான விரைவு தபால்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

கட்டணமில்லா உதவி எண்: இதில், இதுவரை 3.99 லட்சம்தபால்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 99.27 சதவீதம் தபால்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர்உரிமம் விரைவு தபால்கள் குறித்தபுகார்களுக்கு என்ற www.indiapost.gov.in) இணையதளம் மூலமாகவும், Twitter@indiapostoffice என்ற ட்விட்டர் தளத்திலும், 18002666868 என்ற கட்டணமில்லா உதவி எண் ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x