

சென்னை: தேர்தலுக்கு முந்தைய நாள் அரசு பேருந்துகளில் பயணிக்க 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக ஏப். 17, 18 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 2,970 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 3,060 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
10,150 சிறப்பு பேருந்துகள்: தேர்தல் முடிந்த பிறகு பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்ப 20, 21 ஆகிய தேதிகளில் வழக்கமான பேருந்துகளுடன் 1,825 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,295 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதன்படி, 4 நாட்களுக்கும் சேர்த்து 10,150சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில் தேர்தலுக்கு முந்தையநாளான ஏப்.18-ம் தேதி தமிழகம் முழுவதும் பயணிக்க 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) ஊர் திரும்பும் வகையில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டஇருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்பதிவுக்கு tnstc செயலி மற்றும் www.tnstc.in இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிப்பதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.