Published : 13 Apr 2024 08:35 AM
Last Updated : 13 Apr 2024 08:35 AM
சென்னை: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மத்திய சென்னையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்குறுதிகளை துண்டுப் பிரசுரங்களாக வழங்கி வருகின்றனர்.
திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்: இவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர். வரும் 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளார். தயாநிதி மாறன் தினமும் திறந்த வேனிலும், நடந்து சென்றும் பிரச்சாரம் செய்கிறார்.
பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் சென்று வீடு, வீடாக மக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது திமுக ஆட்சியின் சாதனைகளையும், 2024-ம் ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களையும் எடுத்துக் கூறி ஆதரவு கோருகிறார். மகளிர் உரிமைத் தொகை குறித்து யாராவதுகேள்வி எழுப்பினால் தேர்தலுக்குப்பிறகு வழங்க ஆவன செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கிறார்.
பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம்: இவரை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர். வினோஜ் பி.செல்வம் துறைமுகம் தொகுதியின் பல்வேறு பகுதிகள், அயனாவரம், சூளைமேடு ஆகிய இடங்களில் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது, மழை வெள்ளத்தால், இந்த பகுதி அதிகம் பாதிக்கப்பட்டது என்றும், ஆனால் இந்த தொகுதி எம்.பி. ஒருமுறை கூட வந்து உங்களைச் சந்திக்கவில்லை என்றும் திமுகவைக் கடுமையாகவிமர்சித்தார். மழை வெள்ளத்திலிருந்து சென்னைக்கு பாஜகவால் மட்டுமே நிரந்தரத் தீர்வு கொடுக்க முடியும்.
மழை வெள்ளத்தில் சொந்ததொகுதி மக்கள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவி செய்யவராமல் வீட்டிலேயே இருந்தவர் தயாநிதி மாறன். இந்த விஷயத்தில் பிரதமர் மோடியைப் பற்றிப் பேச திமுகவினருக்கு தகுதி கிடையாது. மழை வெள்ளம் வருவதற்கு முன்பே சென்னைக்கு ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியது.
அதில் ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்து மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டதாக திமுக அரசு தெரிவித்தது. ஆனால், மழை வரும்போதுதான் அப்படி எந்த பணிகளும் சென்னையில் நடக்கவில்லை என்பது தெரிகிறது என்று கூறி வாக்கு சேகரித்தார்.
தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி: இவரை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். வரும் 15-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார். பார்த்தசாரதி நேற்று துறைமுகம் சட்டப்பேரவை தொகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார்.
பாரிமுனை பகுதியில்வாக்கு சேகரித்தபோது, தங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை எனச் சிலர் கூறினர். `நான் வெற்றி பெற்றால், உங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வேன்' என்று உறுதி அளித்தார். அவர் மேலும் கூறுகையில், ``மத்திய சென்னை மக்கள் இந்தமுறை மாற்றத்தை விரும்புகின்றனர். அவர்கள் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன். தற்போதைய எம்.பி. தயாநிதி மாறன் மீது மக்களிடம் அதிருப்தி உள்ளது'' என்றார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்டாக்டர் இரா.கார்த்திகேயன்: சிந்தாதிரிப்பேட்டை பகுதியில்துண்டு அறிக்கை கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மத்திய சென்னைக்கு உட்பட்ட 6சட்டப்பேரவை தொகுதிகளிலும் பல இடங்களில் பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டார். தற்போது,2-வது முறையாக மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ``கோடைக்காலத்தில் மத்தியசென்னை பகுதியில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. ஆட்சியாளர்கள் இந்த பிரச்சினையைத் தீர்க்க முயற்சி எடுக்கவில்லை. நிலத்தடி நீரைச் சேகரித்து வீடுகளுக்கு வழங்கும் திட்டம் எங்களிடம் உள்ளது. தற்போதைய எம்.பி. மீது மக்களிடம் அதிருப்தி உள்ளது. அதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT