Published : 13 Apr 2024 06:20 AM
Last Updated : 13 Apr 2024 06:20 AM
சென்னை: இதயம் செயலிழந்த தொழிலாளியை மிகவும் நுட்பமான சிகிச்சை அளித்து கிண்டி கலைஞர் மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி கூறியதாவது: சென்னையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பழனி (55), கடந்த 11-ம்தேதி மாரடைப்பு ஏற்பட்டதால், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, இதய ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது.
திடீரென அவருக்கு இதய செயலிழப்பு (கார்டியாக் அரெஸ்ட்) ஏற்பட்டதால், இதயம் மற்றும் நுரையீரல் மீட்பு சிகிச்சையை (சிபிஆர்) நான்கு சுற்றுகள் அளித்தும், மின் அதிர்வு சிகிச்சை (டிஃப்ரிலேஷன்) அளித்தும் இதயத் துடிப்பு மீட்டெடுக்கப்பட்டது.
பின்னர், உடனடியாக இதய இடையீட்டு ஆய்வரங்கத்துக்கு அவரை மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர்கள் தருமராஜன், சுரேந்திரன், லிஜு ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் ரத்த நாளத்தின் வழியாக அடைப்பை நீக்கும் சிகிச்சையை அளித்தனர். இதய செயலிழப்பு ஏற்பட்டவுடன் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் அவருக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லை. அதனால், இதயம் சுருங்கி விரியும் திறனை இழந்திருந்தது.
இதையடுத்து இன்ட்ரா ஐயோடிக் பலூன் எனப்படும் ரத்த நாள இடையீட்டு பலூனை உள்ளே அனுப்பி அதன் மூலமாக இதயம் முறையாக சுருங்கி விரிய வெளியிலிருந்து முயற்சி எடுக்கப்பட்டது.
இதற்கிடையே, இதய ரத்த நாள அடைப்புகள் சீராக்கப்பட்டு இரு ஸ்டென்ட் உபகரணங்கள் பொருத்தப்பட்டன. பின்னர், இன்ட்ரா ஐயோடிக் பலூன் வெளியே எடுக்கப்பட்டு அந்த நோயாளியின் இதயம் முறையாக இயங்குவது உறுதி செய்யப்பட்டது. மிகவும் சிக்கலான இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொண்டால் ரூ.8 லட்சம் வரை செலவாகும். ஆனால், அவருக்கு இங்கு இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT