

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்.சிவசாமிவேலுமணிக்கு எதிராக அவரது அண்ணனான முன்னாள் எம்பி எஸ்.ஆர்.ஜெயதுரைகளம் இறங்கி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் பண்டாரவிளை வைத்தியரான ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். இவர், தூத்துக்குடி மக்களவை தொகுதியின் முன்னாள் திமுக எம்பி எஸ்.ஆர்.ஜெயதுரையின் (2009- 2014) உடன் பிறந்த தம்பி ஆவார்.
அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தொகுதி முழுவதும் கிராமம், கிராமமாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் முன்னாள் எம்பி எஸ்.ஆர்.ஜெயதுரை கடந்த சில தினங்களாக திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று கனிமொழிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
தம்பி அதிமுக வேட்பாளராக இருக்கும் நிலையில், அண்ணன் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது தூத்துக்குடி தேர்தல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.