

மதுரை: “மனைவி போட்டியிடுவதற்காக ஒரு சீட் பெற நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளரும், விஜயகாந்த் மகனுமான விஜய பிரபாகரனை ஆதரித்து திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட செக்கானூரணி, கிண்ணிமங்கலம், புளியங்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், “விஜய பிரபாகரன் நினைத்தால் 40 தொகுதியில் எங்கு வேண்டுமானால் நிற்கலாம். அவர் வெற்றி பெறுவார். ஏனென்றால், அவரது தந்தை விஜயகாந்த் அந்தளவுக்கு நற்பெயரை பெற்றுள்ளார். ஆனால், தந்தை பிறந்த ஊர் என்பதால் விரும்பி விருதுநகர் தொகுதியில் மக்களை நம்பி போட்டியிடுகிறார்.
பத்தாண்டு காலம் மாணிக்கம் தாகூருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தீர்கள். அவர் எதையும் செய்யவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மக்களவையில் குரல் கொடுக்காமல் டீ, பக்கோடா சாப்பிட்டவர். அவரை திருப்பி நீங்கள் தேர்ந்தெடுத்தால் வடமாநில எம்பிக்கள் போல் மக்களவையில் சென்று டீ, பக்கோடா மட்டும்தான் சாப்பிடுவார்.
மற்றொருவர் ராதிகா சரத்குமார் பாஜக சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். மனைவி போட்டியிடுவதற்காக ஒரு சீட் பெற நடிகர் சரத்குமார், அவரது கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டார். அவரை நம்பியும் இந்தத் தொகுதி நீங்கள் ஒப்படைக்க முடியாது. அதனால், விஜய பிரபாகரனை நம்பி ஒப்படையுங்கள். அவர் உங்களையும், தொகுதியையும் விஜயமாக வைத்திருப்பார்” என்றார்.