

கோவை: கோவையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி நெருங்குவதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று (மார்ச் 11) இரவு பீளமேடு ஆவாரம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி இரவு 10.40 மணி வரை அவர் பிரச்சாரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பீளமேடு போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதில், இரவு 10 மணிக்கு பின்னரும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
அதன் பேரில், பீளமேடு போலீஸார் 341, 293, 143 ஆகிய பிரிவுகளின் கீழ் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் மீது இன்று (மார்ச் 12) வழக்குப்பதிந்தனர்.