Published : 12 Apr 2024 05:38 AM
Last Updated : 12 Apr 2024 05:38 AM
சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தேசிய, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவை பொதுத்தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் பணியாளர்களுக்கான அடுத்தகட்ட பயிற்சி நாளை (ஏப்.13) நடைபெறுகிறது.
அதேநேரத்தில், வாக்குப்பதி வுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதாலும், அதில் 6 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும் என்பதாலும், திமுக, அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், காலையில் 6 மணிக்கு தொடங்கி, 10 மணிக்கு முன்னதாக பிரச்சாரத்தை நிறைவு செய்கின்றனர். பின்னர், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தெருக்கள் வாரியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 2 நாட்கள் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மற்றும் ஒரு நாள் ஓய்வு என்ற அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதேபோல, இண்டியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களும், திமுகவின் முன்னணி நிர்வாகிகளும், மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும், இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதிமுகவைப் பொறுத்தவரை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் தொகுதி வாரியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணியில் உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
திமுக, அதிமுக என இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை கூறி வாக்கு சேகரித்தாலும், பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்கான வியூகங்களை வகுத்து, அதன்படி செயல்பட்டு வருகின்றனர்.
அதேநேரம், எப்படியாவது தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெல்ல வேண்டுமென்ற இலக்குடன் பாஜக செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி கடந்த 4 மாதங்களில் 6 முறை தமிழகம் வந்து, பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோவில் பங்கேற்றுள்ளார். வரும் 15-ம் தேதி தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் சில தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மதுரை, கன்னியாகுமரி, திருவாரூர், தென்காசி உள்ளிட்ட தொகுதிகளில் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதுதவிர, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய்கின்றனர்.
இதுதவிர, பாஜக கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரச்சார களத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.
`சுவிதா' செயலி: தலைவர்கள் பிரச்சாரம், ரோடு ஷோ நடத்தும் வாகனங்கள், எல்இடி திரை பொருத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கான அனுமதி ஆகியவற்றுக்கு `சுவிதா' செயலி மூலம் தலைமை தேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சிகள் விண்ணப்பித்து, அனுமதி பெற்றுள்ளன. அந்த வகையில், இதுவரை 260 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள் ளது. திமுகவுக்கு 83, பாஜகவுக்கு 55, அதிமுகவுக்கு 91, பாமகவுக்கு 11, காங்கிரஸ் கட்சிக்கு 20 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT