

சென்னை: தேர்தல் பிரச்சாரத்துக்காக முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் பகுதியில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தேர்தல் பிரச்சாரத்துக்காக முக்கிய பிரமுகர்கள் வருகைதரும் இடங்களில் தடையற்ற மின்விநியோகம் செய்ய வேண்டும் என மின் தொடரமைப்புக் கழகத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட இடங்களில் பராமரிப்புப்பணிகளை முன்னரே முடித்து தயாராக இருக்க வேண்டும். நிகழ்ச்சியின்போது, பராமரிப்புக்கான மின்தடை போன்றவற்றை செய்யக் கூடாது. அந்நேரத்தில் இயக்கப் பிரிவு தலைமைப் பொறியாளர்கள் துணை மின் நிலையங்களில் இருக்க வேண்டும். அவசர கால பணிகளை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு பிரிவினர் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் இருக்க வேண்டும். இதுபோன்ற பணிகளை தலைமைப் பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.