Published : 12 Apr 2024 05:21 AM
Last Updated : 12 Apr 2024 05:21 AM
சென்னை: மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறனுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை புரசைவாக்கத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசியதாவது:
சுதந்திர இந்தியாவில் அதிக ஊழல் செய்த கட்சி பாஜகதான். தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை அக்கட்சி பெற்றுள்ளது. இந்தியாவில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒரு பைசாகூட பெறாத கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.
சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் மூலம் கார்ப்பரேட் முதலாளிகளை மிரட்டியும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளித்தும், கரோனா பெருந்தொற்று காலத்தில் மருந்து கம்பெனிகளை மிரட்டியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை திரட்டியுள்ளது. இந்த ஊழலை சட்டப்பூர்வமாகவும் செய்துள்ளது.
பாஜக கட்சியில் சேர்ந்தால் அவர்கள் நியாயவாதிகள். அக்கட்சியை எதிர்த்தால் ஊழல்வாதிகள். இந்தகேலிக்கூத்தில் ஈடுபடும் பாஜக வுக்கு இத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
நாட்டின் மதச்சார்பற்ற தன்மை,கூட்டாட்சி, சமூகநீதி, இறையாண்மை என ஒவ்வொரு தூணாகபாஜக சாய்த்து வருகிறது. தேர்தல்ஆணையம், நீதித் துறையையும் கூட தங்களுக்கு சாதகமாக செயல்பட வைக்கிறார்கள். நாட்டில் ஒற்றுமையை சீர்குலைத்து, ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கும் இந்த பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைதேர்தல் நேரத்தில் கொண்டு வந்துமக்களிடத்தில் கலவரத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக் கிறார்கள். நாட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் செயலைத் தட்டிக்கேட்டால் அவர்களை தேசிய விரோதிகளாக சித்தரிக்கிறார்கள்.
பாஜக ஆளும் மாநிலங்களையும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் சமமாக நடத்தாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றனர். இந்தப் போக்குசர்வாதிகாரத்துக்கே வழிவகுக்கும். நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக, மனுநீதி பேசி மக்களைப் பிளவுபடுத்தப் பார்க்கிறது.
அதைத்தடுக்க கடந்த மக்களவைத் தேர்தலைப் போல இந்தத்தேர்தலிலும் தமிழகத்தில் ஒருஇடத்தில் கூட பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடாது. இதனை நாம் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தைப் பின்பற்றி அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜக அரசை தோற் கடிக்க வேண்டும்.
இவ்வாறு சீதாராம் யெச்சூரி கேட்டுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT