

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு1,500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
தமிழகத்தில் கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் நீர்நிலைகள் வறண்டும்,நிலத்தடி நீர்மட்டம் சரிந்தும்காணப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகிஉள்ளது.
இதையடுத்து, காவிரிக் கரையோர மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்காக, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
எனினும், நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. மேலும், கோடைகாலத்தில் கூடுதலாக தண்ணீர் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை 6 மணி முதல் விநாடிக்கு1,500 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 85 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 43 கனஅடியாக குறைந்தது.