

ஓசூர்: ஓசூர் பகுதியில் குழந்தைகளுக்கு அம்மை நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தவும், இந்நோய் தொடர்பாகக் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
ஓசூர் பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சாலைகளில் அனல் காற்று வீசுவதோடு, பகல் நேரங்களில் பொது மக்கள் சாலையில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கி வருகின்றனர். அதே போல, இரவு நேரங்களில் வெயிலின் உஷ்ணத்தால், புழுக்கம் ஏற்பட்டு பொது மக்கள் தூக்கமின்றி பரிதவித்து வருகின்றனர். இதனால், பொது மக்களுக்கு உடலில் அரிப்பு, கொப்புளங்கள் உள்ளிட்ட சரும பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.
இதனிடையே, குழந்தைகளுக்கும் அம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோய் தொடக்கத்தில் தொண்டை வீக்கம், காய்ச்சல், உடல் வலி, சோர்வு ஏற்படுகிறது. பின்னர் உடலில் நீர்க்கோத்த கொப்புளங்கள் உருவாகின்றன. இதனால், ஏற்படும் எரிச்சல் குழந்தைகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. கிராமப் பகுதி மக்கள் இந்நோய் தாக்கம் உள்ள குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வீட்டிலேயே வேப்பிலை, மஞ்சள் மூலம் மருத்துவம் பார்த்து வருகின்றனர். நகரப் பகுதி மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “ஓசூர் பகுதிகளில் பரவும் அம்மை நோயால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாகக் கிராம பகுதி மக்களிடம் இந்நோய் குறித்த தவறான கருத்துகளும், மூட நம்பிக்கையும் உள்ளது. எனவே, கிராம மக்களிடம் இந்நோய் பற்றிய புரிதலையும், விழிப்புணர்வும் ஏற்படுத்தச் சுகாதாரத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறியதாவது: கோடை வெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான பகுதிகளில் உள்ள குப்பைக் கழிவுகளில் உள்ள பல்வேறு கிருமிகள் உயிர்தெழுந்து காற்று மூலம் பரவுகிறது. இதில், ‘வேரிசெல்லா ஜஸ்டர்’ என்ற வைரஸ் கிருமி மூலம் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. குறிப்பாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அதிகம் பரவும்.
குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால், மற்றவர்களுக்கு வர வாய்ப்புள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் சென்று இதற்கு சிகிச்சை பெற வேண்டும். மேலும், எப்போதும் சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். கிராம பகுதி மக்களிடம் இந்நோய் குறித்த தவறான கருத்துகளும், மூடநம்பிக்கையும் உள்ளது.