Published : 12 Apr 2024 07:33 AM
Last Updated : 12 Apr 2024 07:33 AM
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக, அதிமுக, தமாகா, நாம் தமிழர் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நாள் முதல், கொளுத்தும் வெயிலில் அலைந்து வீதி, வீதியாக சென்று, கட்சி நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்து அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு தீவிரமாக ஆதரவு திரட்டுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர். பாலு, அதிமுக -மருத்துவர் ஞா.பிரேம்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் - வி.என்.வேணுகோபால், நாம் தமிழர் கட்சி - வெ.ரவிச்சந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் - பிரபாகரன், மகாத்மா மக்கள் முன்னேற்ற கழகம் - அம்பேத்குமார், தேசிய மக்கள் சக்தி கட்சி - அரவிந்த், நாடாளும் மக்கள் கட்சி - சிட்டிபாபு, வீர தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர் கட்சி - சிவக்குமார், அரவோர் முன்னேற்ற கழகம் - சுதா வள்ளி, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி - பழனியப்பன், தாக்கம் கட்சி - முகமது யாசின், சாமானிய மக்கள் நலக் கட்சி - முனிக்குமார், ஜெபமணி ஜனதா - மோகன்ராஜ் மற்றும் 17 சுயேட்சைகள் உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டி களத்தில் உள்ளனர்.
டி.ஆர்.பாலு (திமுக) - டி.ஆர்.பாலு தொகுதியில் அதிகமாக அறிமுகமானவராக இருந்தாலும், வயதையும் பொருட்படுத்தாமல், கொளுத்தும் வெயிலில் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஈடு கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இவருக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மதிமுக பொது செயலாளர் வைகோ, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்நாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஞா.பிரேம்குமார் (அதிமுக) - இவர் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியான தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்௭ல்ஏக்கள், எம்.பிக்கள்பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும்,௮திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குழுவாக, வீதி, வீதியாக பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வி.என்.வேணுகோபால் (தமாகா) - கவுன்சிலராக இருந்த இவருக்கு பிஜேபி கூட்டணியில் சீட் ஒதுக்கப்பட்டது. தமாகா தொண்டர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
பிஜேபி அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்கும் இவர், தொகுதியில் உட்கட்டமைப்பு வசதிக்குமுதலிடம் அளிக்கப்படும் என்றும், நீர்நிலைகள் பாதுகாக்கப்படும் என்றும், வாக்குறுதி அளித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
வெ.ரவிச்சந்திரன் (நாம் தமிழர் கட்சி) - நாம் தமிழர் வேட்பாளருக்கு மனு தாக்கல் செய்த பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மிகுந்த கால தாமதத்துடன் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இவருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தொண்டர்கள் ஆங்காங்கே தனித்தனியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர் உடல் நலத்தை பொருட்படுத்தாமலும், தொண்டர்கள் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமலும், வீதி, வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT