Published : 03 Apr 2018 09:27 AM
Last Updated : 03 Apr 2018 09:27 AM

தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது விஷால் மட்டும் கிடையாது; திரைத்துறை பிரச்சினைகளை தீர்க்க தனி வாரியம் அமைக்கப்படும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

“திரைப்படத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும். அதன் மூலமாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்” என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை, திரைப்பட தயாரிப்பாளர்கள் முன்னாள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் ரித்தீஷ் ஆகியோர் சந்தித்து, திரைத்துறை பிரச்சினைகள் குறித்து நேற்று ஆலோசனை நடத்தினர்.

பின்னர், கலைப்புலி எஸ்.தாணு கூறும்போது, “சினிமா துறையில் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகிறோம். அதற்குரிய தீர்வை அரசு எடுக்க வேண்டும் என்பதற்காக, எங்களின் வேண்டுகோளை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். இப்பிரச்சினைகளை, முதல்வரிடம் எடுத்துக் கூறி, தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேசி சுமூகமான தீர்வு காணப்படும் என்று அமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார்” என்றார் அவர்.

முன்னாள் எம்.பி., நடிகர் ரித்தீஷ் கூறும்போது, ``நடிகர் சங்கத்துக்கோ, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கோ நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஷாலுக்கு துளிகூட கிடையாது. எதை எடுத்தாலும் அரசியல் ஆக்க வேண்டும் என்பதுதான் அவர் எண்ணம். தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பிரச்சினையைப் பூதாகரமாக கிளப்பி, இவ்வளவு பெரிய போராட்டம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. விஷால்தான் இதற்கு காரணம்.

நடிகர் சங்கத் தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட உள்ளேன். விஷாலால் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தைக்கூட நடத்த முடியவில்லை. நடிகர் சங்க தேர்தல் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு மாயையை உருவாக்கி விளம்பரம் தேடிக்கொள்கிறார், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் விஷாலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார் அவர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது: படங்களை டிஜிட்டல் முறையில் க்யூப் மூலமாக வெளியிடுவதில் செலவுத்தொகை அதிகமாக இருக்கிறது என்ற பிரச்சினை, தமிழகம் மட்டுமல்லது, தென் மாநிலங்கள் அனைத்திலும் இருந்தது. அங்கு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் உடன்பாடு ஏற்படவில்லை. இதில், அரசுக்கும், திரைத்துறைக்கும் இடையே எந்தப் பிரச்சினையுமில்லை.

திரைப்படத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி, திரையரங்குகள் திறக்கப்பட்டன. படத்தை வெளியிடுவதில் பிரச்சினை இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று தயாரிப்பாளர்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து, பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு சில கொள்கை முடிவுகளை அறிவிக்கவுள்ளது. தேவைப்பட்டால், திரைப்படத் துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும். அதன் மூலமாக அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்படும். தயாரிப்பாளர்கள் சங்கப் பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது விஷால் மட்டும் கிடையாது. இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x