

திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார்நாகேந்திரனுக்கு ஆதரவு கேட்டு அம்பாசமுத்திரத்தில் வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இதற்கான மேடை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் நேற்று தொடங்கியது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு கடந்த பிப்ரவரி 28-ம் தேதி பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இந்நிலையில் 2-வது முறையாக திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் பகுதிக்கு பிரதமர் வரும் 15-ம் தேதி ( திங்கள்கிழமை ) வருகிறார். அன்று மாலை 4.15 மணிக்கு அம்பாசமுத்திரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசுகிறார்.
பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் வேட்பாளர் நயினார் நாகேந்திரன், மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனிடையே அம்பாசமுத்திரத்தில் பிரதமர் பங்கேற்கும் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெறும் பகுதி, அகஸ்தியர்பட்டியில் மோடி வரும் ஹெலிகாப்டர் இறங்குதளம், பிரச்சார கூட்டம் நடைபெற இருக்கும் மைதானம் உள்ளிட்ட இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.