Published : 12 Apr 2024 04:22 AM
Last Updated : 12 Apr 2024 04:22 AM
வேலூர்: இண்டியா கூட்டணியை ஒருங்கிணைத்த ஒரே காரணத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பாஜக கோபப்படுகிறது என வேலூரில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட் பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் பிரச்சார பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வேலூர் மாநகர செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார்.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, ‘‘கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என சொன்னவர்தான் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆம்புலெட் ஐன்ஸ்டீனாக மாற்றி கூறியதும் அவர்தான். அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பார்த்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என சவால் விடுகிறார். அவரிடம், விவாதிக்க என்ன இருக்கிறது? திருமணம் ஆனதும் தேனிலவுக்காக பாஸ்போர்ட் வாங்கி வெளிநாடு செல்வார்கள்.
ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருமணம் ஆனதும் மிசா வாங்கி சிறைக்கு சென்றவர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தமிழகத்தில் ஏதாவது ஒரு சிறைக்கு போய் வந்துள்ளாரா? கூவத்தூர் கூத்தில் முதல்வராகி வந்தவர் பாஜகவுடன் எப்படி கள்ள உறவு வைத்துள்ளார் என நான் சொல்கிறேன். மழை வந்ததற்கு நாங்கள் காரணமா? தூத்துக்குடி வெள்ளத்தின் போது ஒன்றிய அரசு உதவியதா? பறந்தே வந்த ராஜ்நாத் சிங் பறந்தே சென்றார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பறந்தே வந்து சென்றார்.
வெள்ள நிவாரண நிதியாக ரூ.37 ஆயிரம் கோடி நிதி கேட்டோம். ஆனால், இதுவரை வரவில்லை. இதைப்பற்றி பழனிசாமி மத்திய அரசைக் கண்டித்து பேசுவாரா என்றால் இல்லை. பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் திமுகவில் வாரிசு அரசியல் செய்வதாக பேசுகிறார். இந்தியா முழுவதும் பாஜக தலைவர்களின் வாரிசுகள் அரசியலில் உள்ளார்கள். அதைப் பற்றி அவர்கள் வாய்திறக்க மாட்டார்கள். எனக்கு வேறு வேலை இல்லை என்பதால் ஒரு விமர்சகனாக நாட்களை கடத்தி வருகிறேன்.
ரயில் பயணத்துக்காக மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் நான் இரண்டே கால் லட்சம் ரூபாயை இழந்திருக்கிறேன். காரணம் மூத்த குடி மக்களுக்கான ரயில்வே சலுகையை மோடி ரத்து செய்து விட்டார். தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டி போடுவதை பார்த்து மீண்டும் பள்ளியில் போய் சேர்ந்து விடலாமா என எனக்கே ஆசை வந்துவிட்டது. அப்படி ஒரு நல்ல திட்டத்தை மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இண்டியா கூட்டணியை ஒருங்கிணைத்த ஒரே காரணத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பாஜக கோபப்படுகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT