“நான் அளித்த ஓர் ‘உறுதி’யால்தான் எனக்கு அம்மா ‘சீட்’ கொடுத்தார்!”  - விஜயகாந்த் மகன் உருக்கம்

டி.கல்லுப்பட்டி பகுதியில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
டி.கல்லுப்பட்டி பகுதியில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Updated on
1 min read

மதுரை: தன்னுடைய தாய் பிரேமலதாவிடம் அளித்த உறுதி ஒன்றின் காரணமாகவே விருதுநகர் தொகுதியில் தனக்கு ‘சீட்’ கிட்டியதாக டி.கல்லுப்பட்டியில் நடந்த பிரச்சாரத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உருக்கமாக தெரிவித்தார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் விஜய பிரபாகரன் திருமங்கலம் பகுதியில் உள்ள டி.கல்லுப்பட்டி பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவு கோரி முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் செய்தார். முன்னதாக, டி குன்னத்தூர் உள்ள ஜெயலலிதா கோயிலில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பிரச்சாரத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசுகையில், “எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் அருளாசியுடன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறேன். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, எனது அம்மா பிரேமலதா, கிருஷ்ணசாமி உள்பட கூட்டணிக் கட்சி தலைவர்கள் எனக்காக பிரச்சாரம் செய்கிறார்கள். விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதில் உண்மையாகவே சந்தோஷப்படுகிறேன். எனது தந்தை விஜயகாந்த் பிறந்த மாவட்டம் விருதுநகர். எனது சொந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.

விஜயகாந்த் விருதுநகரில் பிறந்து மதுரையில் வளர்ந்து சென்னையில் வசித்தார். அவரது மறைவுக்குப் பிறகு எங்களுக்கும், எனது தந்தை பிறந்த ஊருக்குமான பந்தம் முறிந்துவிடுமோ என நினைத்தேன். ஆனால், அந்தப் பந்தம் இந்தத் தேர்தலுடன் தொடர்கிறது. டி.கல்லுப்பட்டி போன்ற விருதுநகர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகள் எனக்கு ஒன்றும் புதிது அல்ல. எனது சகோதரனின் படப்பிடிப்பு இங்குதான் நடந்தது. அதற்காக அடிக்கடி வந்துள்ளேன்.

மக்களுக்காக வெற்றி பெற்று சேவை செய்ய தயாராக இருக்கிறோம். என்னை நீங்கள் தேர்வு செய்து வெற்றி பெற வைத்தால் இதே தொகுதியில் வீடு எடுத்து தங்கி மக்களுக்கு சேவை செய்வேன் என்று நான் என் அம்மாவிடம் உறுதி கூறியதால் எனக்கு இந்தத் தொகுதியில் போட்டியிட சீட்டு கொடுத்துள்ளார். என்னை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். நான் உங்களைப்பார்த்துக் கொள்வேன்” என்று அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in