“குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது?” - உதயநிதி மீது அண்ணாமலை விமர்சனம்

“குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது?” - உதயநிதி மீது அண்ணாமலை விமர்சனம்
Updated on
1 min read

கோவை: "விக்ரம் படத்தில் போதைப்பொருள் விற்கும் ரோலக்ஸ் பெயரை குழந்தைக்கு வைக்கிறார் உதயநிதி" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும், அவர் நடித்த மாமன்னன் படம் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர், "பாஜக உள்ளே வந்தால் அனைத்தும் காணாமல் போய்விடும் என்று 60 ஆண்டுகளாக ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள்.

உதாரணத்துக்கு, உதயநிதி ‘மாமன்னன்’ என்று படம் எடுப்பார். அதில் இரண்டு ஊர் இருக்கும். தெற்கு ஊரில் இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள். வடக்கு ஊரில் இருப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள். அப்புறம் இதில் கெட்டவர்கள் ‘ஜி’ என்று பேசுவார்கள். இப்படி அரைத்த மாவையே அரைக்கிறார்கள். நான் அந்தப் படத்தை பார்க்கவில்லை. அதைவிட நிறைய வேலை இருக்கிறது. பார்த்தவர்கள் சொன்னார்கள்.

சினிமாவில் ஒரு நடிகர் படம் நடித்துவிட்டால் மும்பையில் போய் செட்டில் ஆகிவிடுவார். கேட்டால் குழந்தைகள் மும்பையில் படிப்பதால் அங்கே செட்டில் ஆவதாக சொல்வார்கள். சமூக நீதி படம் எடுக்கிற நடிகர்கள், இயக்குநர்கள் எல்லாம் ஓசிக்காகவா எடுக்கிறார்கள், இல்லை. அனைத்தும் பணம். ஒவ்வொன்றுக்கும் பட்ஜெட் போட்டு எடுக்கிறார்கள். இவர்கள் என்ன சமூக நீதியை சொல்ல போகிறார்கள்.

சினிமா மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால், சினிமாவை கொண்டு மாமன்னன் போன்ற பிரச்சார திரைப்படத்தை எடுக்க பயன்படுத்தினால், அதை கேட்க வேண்டிய நேரம் இது.

நேற்று ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கிறார்கள். அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தார் தெரியுமா..? கமல் நடித்த விக்ரம் படத்தில் போதைப்பொருள் விற்கும் ரோலக்ஸ் பெயரை வைத்துள்ளார். பெயர் வைக்க சொன்னால்கூட போதைப்பொருள் மாபியா பெயரா வைப்பது? இப்படி எல்லாம் செய்துவிட்டு அரசியல் மாற்றம் பற்றி பேசுகிறார்" என்று அண்ணாமலை விமர்சித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in