Published : 11 Apr 2024 03:47 PM
Last Updated : 11 Apr 2024 03:47 PM

பெரம்பலூர் தொகுதி பிரச்சாரக் களம் எப்படி? - ஒரு பார்வை

மண்ணச்சநல்லூர் பகுதியில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் அருண்நேரு.

பெரம்பலூர்: பெரம்பலூர் தொகுதியில் திமுக, அதிமுக, ஐஜேகே, நாம் தமிழர் கட்சி உட்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், தினந்தோறும் இவர்கள் கிராமம் கிராமமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூறாவளியாய் சுழலும் அருண்நேரு: பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கூட்டணி கட்சித் தலைவர்கள் வைகோ, கமல்ஹாசன், இரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், ஜவாஹிருல்லா என ஒரு பெரும்படையே பிரச்சாரம் செய்துள்ளது.

இத்தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலைகள், மண்ணச்சநல்லூர் தொகுதியை ஒருங்கிணைத்து உணவு தயாரிப்பு மண்டலம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அருண்நேரு பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று இவர் மண்ணச்சநல்லூர் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

டச்சிங்காக பேசும் பாரிவேந்தர்: தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக அக்கட்சி நிர்வாகிகளுடன் அமமுக, பாஜகவினரும் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் வழியாக துறையூர், நாமக்கல் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை செய்து முடிப்பதே தனது லட்சியம் எனக் கூறி பாரிவேந்தர் வாக்கு சேகரித்து வருகிறார்.

தும்பலம் கிராமத்தில் நேற்று பிரச்சாரம் செய்த ஐஜேகே
நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர்.

மேலும், ‘‘பெரும்பாலும் அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வருவார்கள். கடந்த 5 ஆண்டுகளில் எனது சொந்த நிதி ரூ.126 கோடியை இந்த தொகுதி மக்களுக்கு செலவழித்திருக்கிறேன்’’ என டச்சிங்காக பேசி வாக்கு சேகரித்து வருகிறார். இவரை ஆதரித்து பிரதமர் மோடி ஏப்.13-ம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார்.

மண்ணின் மைந்தர் நான்தான்: அதிமுக வேட்பாளர் சந்திரமோகன், பெரம்பலூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி திட்டத்தை செயல்படுத்தவும், வாழை பதனிடும் தொழிற்சாலை அமைக்கவும், பெரம்பலூர் வழியாக ரயில் பாதை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்வேன். உள்ளூர்காரரான என்னை தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாம் எனக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

கிருஷ்ணாபுரம் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் சந்திரமோகன்.

இவருக்கு ஆதரவாக உள்ளூர் அதிமுக பிரபலங்களான முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வரகூர் அருணாசலம், பரஞ்ஜோதி ஆகியோர் பிரச்சாரத்தில் உள்ளனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் பிரச்சாரம் செய்துள்ளார். ஏப்.13 அன்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் செய்ய உள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வீடு வீடாக நாம் தமிழர் பிரச்சாரம்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.தேன்மொழி, வீடு வீடாகச் சென்றும், பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுடன் வயலில் களை பறித்து, நாற்று நட்டும் வாக்கு சேகரித்து வருகிறார். தொகுதியில் ஏப்.13 அன்று சீமான் பிரச்சாரத்துக்குப் பின்னர் தொண்டர்களிடம் இன்னும் உற்சாகம் அதிகரிக்கும் என்கின்றனர் அக்கட்சியினர்.

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் கிராமத்தில் பிரச்சாரத்தில்
ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி.

ஒன்றியம்தோறும் சின்ன வெங்காயம், காய்கறி குளிர்பதனக் கிடங்குகளும், ஊராட்சிகள் தோறும் சுகாதார வளாகம் அமைக்கப்படும். பழமையான ரஞ்சன்குடி கோட்டையை சுற்றுலா தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார். இவர் நேற்று பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் கிராமத்தில் கட்சியினருடன் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார்.

ஒரே நாளில் 3 விஐபிக்கள்:

ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து சிறுகனூரில் ஏப்.13-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார். அதேநாளில், அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து பெரம்பலூர் வானொலி திடல் அருகே அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நெ.1 டோல்கேட் பகுதியிலும் பிரச்சாரம் செய்கின்றனர். ஒரே நாளில் 3 முக்கியத் தலைவர்களும் பிரச்சாரம் செய்ய உள்ளதால் பெரம்பலூர் தொகுதி தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x