Published : 12 Apr 2018 02:02 PM
Last Updated : 12 Apr 2018 02:02 PM

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு: ஈரோடு அருகே இளைஞர் தீக்குளித்து தற்கொலை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஈரோடு மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது வீட்டு சுற்றுச்சுவற்றில் பிரதமர் மோடிக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை துவக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைர விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அனைவரும் கருப்பு உடை அல்லது கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் எனவும், அனைவரது வீடுகளிலும் கருப்பு கொடியேற்றி துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் எனவும், திமுக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சிந்தோடு பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (24) என்ற பொம்மை வியாபாரி, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு அருகாமையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதையடுத்து, அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தர்மலிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது வீட்டு சுற்றுச்சுவரில் மத்திய அரசு, கர்நாடக அரசுகளை கண்டித்து வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x