

18-வது மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பத்திரிகைகள், சுவரொட்டி, துண்டு பிரசுரம், தட்டி விளம்பரம், தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் பிரச்சார விளம்பரங்களைத் தீவிரமாக வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தல் நடத்தை விதிகளின்கீழ் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் விளம்பரங்களை அச்சடிக்கும் நிறுவனங்களின் பெயர் அந்த விளம்பரங்களில் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஆனால், வெளியீட்டாளரின் பெயர் இல்லாமலேயே பல தேர்தல் விளம்பரங்கள் வெளிவருவதை காண முடிகிறது.
தேர்தல் தொடர்பான துண்டுபிரசுரங்கள், சுவரொட்டிகள், தட்டி விளம்பரங்களில் அச்சிடும் அச்சகத்தாரர்கள் மற்றும் வெளியீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி இடம் பெற வேண்டும். இவற்றைப் பூர்த்தி செய்தபின் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து ஒப்புதல் சான்றிதழ் வாங்கிய பிறகுதான் தேர்தல் தொடர்பான விளம்பரத்தினை வெளியிட முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.