

வேலூர்/ கோவை: கோவையில் ஜவுளி தொழிலை காப்பாற்றுவதற்கு பதிலாக, அதிகமின் கட்டணத்தை சுமத்தி தொழில் நடத்த விடாமல் செய்கிறது திமுகஅரசு. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் வேகமாக முன்னேறி வரும் நிலையில், முதலீடுகளை எல்லாம் தடுத்து, முடக்க நினைக்கிறது. தமிழக வளர்ச்சிக்கு திமுக அரசு தடையாக இருக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று காலை நடந்த பிரச்சாரபொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களான ஏ.சி.சண்முகம் (வேலூர்), சவுமியா அன்புமணி (தருமபுரி), பாலு (அரக்கோணம்), அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை), கணேஷ்குமார் (ஆரணி), நரசிம்மன் (கிருஷ்ணகிரி) ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:
வரலாற்று சிறப்புமிக்க வேலூர் மண்ணில் ஜலகண்டேஸ்வரர், முருகப்பெருமானை வணங்குகிறேன். தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை, ‘பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடு, மோசடி, ஊழல்கள் நிறைந்த நாடு இந்தியா’ என்று உலக நாடுகள் விமர்சித்து வந்தன. அப்போதைய ஆட்சி அப்படி இருந்தது. இப்போது, உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு, மரியாதை பலமடங்கு உயர்ந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் தமிழக மக்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.
குடும்ப ஆட்சி நடத்தும் திமுக, தமிழகத்தை பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. ஊழலின்முதல் காப்புரிமை திமுகவிடம்தான் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மணல் கொள்ளையால் ரூ.4,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்தகொள்ளை நடந்துள்ளது. பள்ளிகளுக்கு அருகில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுகிறது. குழந்தைகளின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியாமல், போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியவரை ஆதரித்து காப்பாற்றிக் கொண்டிருந்தனர்.
சாதி, மதம், மொழி, பிராந்தியம்என மக்களை பிரித்தாள்வதுதான் திமுகவின் முக்கிய நோக்கம். காங்கிரஸ் - திமுக கூட்டணி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு இதுவே காரணம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் கைதான மீனவர்களை மீட்கதேசிய ஜனநாயக கூட்டணி அரசுதீவிர முயற்சி செய்தது. 5 மீனவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றி உள்ளோம்.
பெண் சக்தியை போற்றும் மண் தமிழகம். ஆனால், பெண் சக்தியைஅழிப்போம் என்கிறார் ராகுல்காந்தி. திமுகவில் சனாதனத்தை அழிப்பேன் என்று ஒருவரும், ராமர்கோயிலை புறக்கணிப்பதாக ஒருவரும் கூறிவருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எப்படி மோசமாக நடத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கான உத்தரவாதம்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
பாஜக வேட்பாளர்களான அண்ணாமலை (கோவை), எல்.முருகன் (நீலகிரி), வசந்தராஜன் (பொள்ளாச்சி), ஏ.பி.முருகானந்தம் (திருப்பூர்) ஆகியோரை ஆதரித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
இண்டியா கூட்டணியில் உள்ளஅனைவரும் பரம்பரை, வம்சாவளி கட்சியினர். எப்போதும் தங்கள்மகன்கள், மகள்கள், பேரன்கள்,பேத்திகள் என வாரிசுகள் மட்டுமே ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என விரும்புகின்றனர். ஏழைகள், பட்டியலின, பழங்குடியின மக்கள் முன்னுக்கு வருவதை அவர்கள் விரும்புவதும் இல்லை, அதை அனுமதிப்பதும் இல்லை.
ஆனால், முதல்முறையாக பட்டியலின பெண்ணை நாட்டின் குடியரசு தலைவராக அமர்த்தியது பாஜகதான். அதற்குகூட அவர்கள் ஆதரவு தெரிவிக்காமல், எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவையில் ஜவுளி தொழிலை காப்பாற்றுவதற்கு பதிலாக, அதிக மின் கட்டணத்தை சுமத்தி தொழில் நடத்த விடாமல் செய்கிறது திமுக அரசு. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் வேகமாக முன்னேறி வரும் நிலையில், முதலீடுகளை எல்லாம் தடுத்து, முடக்க நினைக்கிறது. தமிழக வளர்ச்சிக்கு திமுக அரசு தடையாக இருக்கிறது.
திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணியினர் எதிர்ப்பு அரசியல்,வெறுப்பு அரசியல் தவிர, உருப்படியாக எதையும் செய்வதில்லை.
கோவையில் சங்கமேஸ்வரர் கோயில் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய திமுக, தீவிரவாதிகளை காப்பாற்றவும், பாதுகாக்கவும் வேண்டிய வேலைகளை செய்கிறது.
நம் நாடு 5ஜி-யில் உலக சாதனைபடைத்துள்ளது. திமுக 2ஜி ஊழல்செய்து நாட்டை அவமானப்படுத்தியது. ஊழல்வாதிகளை காப்பாற்றுவதுதான் திமுக, காங்கிரஸின் தலையாய குறிக்கோள்.
இண்டியா கூட்டணி, நாட்டின்இறையாண்மையை சேதப்படுத்தியதற்கு, தமிழக மீனவர்கள் விலைகொடுக்கின்றனர். ஊழல், குடும்ப அரசியல், போதைப் பொருள், தேசியத்துக்கு எதிரான கொள்கை ஆகியவற்றை நாட்டைவிட்டு அகற்றும் தேர்தல் இது. திமுக, காங்கிரஸ் செய்த இந்த பாவங்களுக்கு வரும் 19-ம் தேதி நடக்கும் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
‘தமிழகத்தை சரிசெய்ய மோடியால்தான் முடியும்’ - வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை வரவேற்றும், வாக்கு சேகரிக்கும் வகையிலும் தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி, தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் பேசினார். மேடையில் பாஜக பெண் நிர்வாகி ஒருவர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அவருக்கு மோடியும் குனிந்து மரியாதை செலுத்தினார்.
மேட்டுப்பாளையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியபோது, ‘‘பிரதமர் தமிழகம் வந்தால் முதல்வருக்கு பிடிப்பதில்லை. வேடந்தாங்கல் பறவையா என்கிறார். திமுகவினர்போல குடும்ப உறுப்பினர்களுக்காக அவர் வேலை செய்யவில்லை. 142 கோடி இந்திய மக்களுக்காக வேலை பார்க்கிறார். அதனால் ஒரு பறவைபோல பாசத்துடன் அடிக்கடி தமிழகம் வருகிறார். 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழியை காங்கிரஸ் கட்சிதான் கைது செய்து சிறையில் அடைத்தது. பிரதமர் பற்றி அவதூறாக பேசும் ஆ.ராசாவை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும். ஊழல், போதைப் பொருள் புழக்கம், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை குறித்து வீடு வீடாக சொல்ல வேண்டும். இதையெல்லாம் சரிசெய்ய பிரதமர் மோடி ஒருவரால்தான் முடியும்’’ என்றார்.