Published : 11 Apr 2024 05:33 AM
Last Updated : 11 Apr 2024 05:33 AM
சென்னை: ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு ஆளுநர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்அரசியல் கட்சி தலைவர்கள் ரம் ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: ஈகை பெருநாளின் மகிழ்ச்சிகரமான தருணத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். இந்த நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்பு, சமுதாயத்தில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இல்லாதோருக்கு உதவுவதையும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்தவர் நபிகள் நாயகம். அவரது வழியில் வாழ்ந்துவரும் இஸ்லாமியர்களின் நலன் காக்கும் அரசாக திமுக அரசு திகழ்ந்து வருகிறது. 2007-ம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்குநரகம் உருவாக்கியது, மீலாதுநபிக்கு அரசு விடுமுறை, இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு என எத்தனையோ சாதனைகளைச் செய்த தலைவர் கருணாநிதியின் வழியில், எல்லார்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டைக் கொண்ட திராவிட மாடல் அரசும்இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது. இஸ்லாமியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: அதிமுக ஆட்சிக்காலங்களில் இஸ்லாமியர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள்செயல்படுத்தப்பட்டு சிறுபான்மைமக்களின் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதையும் அதிமுக என்றென்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக திகழும் என்பதையும் இந்த இனிய தருணத்தில் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள் என்றநபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில்கொண்டு வாழ உறுதியேற்போம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நபிகள் நாயகத்தின்போதனைகளைக் கருத்தில்கொண்டு அனைவரும் தங்கள் கடமைகளை செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: சிறுபான்மை மக்களுக்கு மதச்சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படுமானால் ராகுல்காந்தி தலைமையில் நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரண்டு சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பார்கள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் நிலைநாட்டப்படவும், சமூக ஒற்றுமை தழைக்கவும் பாடுபடுவோம் என ரமலான் திருநாளில் சூளுரைப்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: உலககெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகைஉள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் இந்த புனித நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: ரம்ஜான் திருநாளை கொண்டாடும் இந்த இனிய நாளில், அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: சமூக உறவுகளை மேம்படுத்த இரக்க உணர்வும் கருணை பார்வையும் இயல்பான பண்பாக இருப்பது அவசியம் என்பதை நபிகள் வலியுறுத்தியுள்ளார். புனித ரமலான் மாதம் நம்மை விட்டு பிரிந்தாலும் அது நமக்கு அளித்த பயிற்சியை ஆண்டு முழுவதும் கடைபிடிப்போம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இஸ்லாமியர்களின் வாழ்வு மேம்பட தமாகா என்றும் துணைநிற்கும்.
ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: இறைதூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: இறைதூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளையும் நற்பண்புகளையும் பின்பற்றி வாழ்வில் உயர அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும், பாமக தலைவர் அன்புமணி, இந்திய தேசிய லீக் தலைவர் முனிருத்தீன் ஷெரீப், தவ்ஹீத் ஜமாஅத் துணை பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா, எம்.பி சு.திருநாவுக்கரசர், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, பெருந்தலைவர் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோ ரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT