Published : 11 Apr 2024 05:47 AM
Last Updated : 11 Apr 2024 05:47 AM
சென்னை: மேற்குவங்க முன்னாள் தலைமைசெயலர் பி.எஸ்.ராகவன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 97.
கடந்த 1952-ம் ஆண்டு மேற்குவங்க பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான பி.எஸ்.ராகவன், சென்னை அடுத்த பூந்தமல்லியில் பிறந்தவர். இவர், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநில அரசுகளில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். கடந்த 1961-ம் ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டு குழுவில் செயலாளராக பொறுப்பேற்று, நாட்டின் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோருடன் பணியாற்றினார்.
டெல்லியில் மத்திய உணவுத்துறை கூடுதல் செயலாளராக இருந்த போது தமிழகத்துக்கு கூடுதல் அரிசியை ஒதுக்கினார். ஒரு வகையில், இதுவே எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை கொண்டுவர உதவியாக இருந்தது.
அவர் கடந்த 1987-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் சென்னையில் குடியேறினார். அத்துடன், ‘தி இந்து’ ஆங்கிலநாளிதழின் ஆசிரியர் குழுவுக்கும்ஆலோசகராக பல ஆண்டுகள்பணியாற்றினார். இதுதவிர, பல்வேறு தமிழ் நாளிதழ்கள் மற்றும்பருவ இதழ்களிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
ஆங்கிலத்தில் பல நூல்களையும் எழுதியுள்ள ராகவன், தமிழில் எழுதிய ‘நேரு முதல் நேற்று வரை’ என்பது பிரபலமான நூலாகும். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
சென்னை, அடையாறு நேருநகர் 2 வது தெருவில் வசித்து வந்த பி.எஸ்.ராகவன், உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் ஏற்கெனவே இறந்துவிட்டார். பி.எஸ்.ராகவனின் இறுதிச்சடங்கு இன்று காலை 11.30 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT