

ஓசூர்: கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார், பதவியை ராஜினாமா செய்து கட்சித் தலைமைக்குக் கடிதம் அனுப்பிஉள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஓசூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் அதிமுக போட்டியிட வேண்டும் என்றும், நான் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் விருப்ப மனு அளித்தேன். இது தொடர்பாக நேர்காணலும் நடைபெற்றது.
இந்நிலையில், கர்நாடகாவில் போட்டியில்லை என்று கட்சித் தலைமை அறிவித்தது. மேலும், யாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற தகவலும் இல்லை. இதனால், கர்நாடக மாநிலஅதிமுக தொண்டர்கள் ஏமாற்றமும், குழப்பமும் அடைந்துள்ளனர்.
எனவே, நான் என் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளேன். அதிமுகவில் ஒற்றை தலைமையே வேண்டும் என நாங்கள் ஆதரவளித்தோம். தற்போதைய நடவடிக்கையால், கூட்டு தலைமையே சரியாக இருக்கும் என்பதை உணர்ந்துள்ளோம்.
மேலும், பொதுச் செயலாளர் பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரங்களில், பாஜக மற்றும் பிரதமர் மோடியை விமர்சிப்பதில்லை. இதில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.