Published : 11 Apr 2024 05:57 AM
Last Updated : 11 Apr 2024 05:57 AM
திருநெல்வேலி/ தென்காசி/ நாகர்கோவில்: தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் நேற்று ரம்ஜான் தொழுகை நடைபெற்றது.
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ஆனால், வளைகுடா நாடுகளிலும், கேரள மாநிலத்திலும் ஒருநாள் முன்னதாக நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால், கேரளாவில் நேற்றுபொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சில பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் நேற்று முன்தினம் பிறை கண்டதன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். குளச்சல், நாகர்கோவில் இளங்கடை, ஆளூர், திட்டுவிளை, குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. முன்னதாக, தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஃபித்ரா என்னும் நோன்புபெருநாள் தர்மம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி புதிய பழைய பேருந்துநிலையம், தினசரி சந்தை பகுதிகளில் இனிப்பு வழங்கப்பட்டது.
இதேபோல, தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை, வீரணம், சங்கரன்கோவில், புளியங்குடி, வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் 31 இடங்களில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. மேலப்பாளையத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகேயுள்ள ஈத்கா திடல், ரகுமானியா மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடல்உள்ளிட்ட 6 இடங்களில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.
மேலப்பாளையம் ஈத்கா திடலில் சிறப்புத் தொழுகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா நடத்திவைத்து, குத்பா உரையாற்றினார். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஏழைகளுக்கு அரிசி,மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT