

கோவை: மேட்டுப்பாளையத்தில் நேற்று நடந்த பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை பார்த்து தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இந்நிகழ்விற்கு மேட்டுப்பாளையம், தென் திருப்பதி நால்ரோடு சாலை அருகே மேடை மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. வளாகத்தில் பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் நிரம்பியதும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நடிகை நமிதா, ‘பாஸ்’ வைத்திருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் நிகழ்ச்சி வளாகத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
சிறிது நேரத்தில் நடிகை நமிதா உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார். பாதுகாப்பு பணி மேற்கொண்ட காவல் அதிகாரிகள் கூறும் போது, “நிகழ்ச்சி வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட இருக்கைகளை விட அதிக எண்ணிக்கையில் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. வளாகத்தின் இருக்கைகள் நிரம்பியவுடன் பாதுகாப்பு காரணங்கள் கருதி உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது” என்றனர்.
பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற தென் திருப்பதி நால் ரோடு சாலையில் ஏராளமான பேக்கரி, உணவகங்கள் உள்ளன. கோடை வெயிலின் தாக்கம் மிகவும் உக்கிரமாக இருந்த நிலையில் அருகில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் என நிகழ்விற்கு உள்ளே செல்ல முடியாதவர்கள் பலர் சாலையோரம் மரத்தடியில் நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்தனர். பிரதமர் மோடி வருகையின் போதும், மீண்டும் புறப்பட்ட போதும் அணிவகுத்த மூன்று ஹெலிகாப்டர்களை பார்த்து ஆர்ப்பரித்தனர்.