

பொள்ளாச்சி: நோட்டாவுக்கு வாக்களிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. மதிப்பு மிக்க வாக்கை நோட்டாவுக்கு அளித்து வீணாக்கி விடாதீர்கள் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து பொள்ளாச்சியில் நேற்று சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது: இந்த தேர்தலை மக்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும், கடமை உணர்வுடனும் அணுக வேண்டிய அவசியத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாநில கட்சிகளான திமுக, அதிமுக, மத்திய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகியவை பலமுறை ஆட்சி செய்துள்ளன. புதிதாக யார் அதிகாரத்துக்கு வர போகிறார்கள்? யாருக்கும் வாக்களிக்க மாட்டேன் என சொல்லாதீர்கள்.
தேர்தலை புறக்கணிப்பதாக சில கிராம மக்கள் சொல்கிறார்கள். அது தவறு. மதிப்பு மிக்க வாக்கை நோட்டாவுக்கு போடாதீர்கள். நோட்டாவுக்கு வாக்களிப்பதால் எந்த மாற்றமும் வராது. அறிவுப்பூர்வமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மண், காற்று, நீரை நச்சுப்படுத்தும் ஆலைகளை கொண்டு வந்தது திராவிட கட்சிகள். அவற்றை திணித்தது இந்திய கட்சிகள். அணு உலையை கேரளாவில் வேண்டாம் என கூறியது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள். தமிழகத்தில் அணு உலை வேண்டும் என்பவர்கள் அதே கட்சியினர்.
தமிழகத்தில் கனிம வளங்கள் அழிக்கப்படுகின்றன. ஆன்லைன் சூதாட்டத்தால் பல பேர் கடனாளி ஆகி உயிரிழந்துள்ளனர். நான் ஓட்டுக்கான ஆள் இல்லை. நாட்டுக்கான ஆள். பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுரேஷ்குமாருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.