கோடை வெப்பம் எதிரொலி | ஆவின் பால் கொள்முதல் அளவு குறைந்தது

கோடை வெப்பம் எதிரொலி | ஆவின் பால் கொள்முதல் அளவு குறைந்தது
Updated on
1 min read

சென்னை: கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால், ஆவின் பால் கொள்முதல் தினசரி சராசரி 3 லட்சம் லிட்டர் வரை சரிந்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கால்நடைகளுக்கு வெப்ப அழுத்தம் ஏற்பட்டு, உள்நாட்டு கால்நடை மற்றும் கலப்பின, அயல்நாட்டு கலப்பின கறவை மாடுகளின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் தினசரி சராசரி பால் கொள்முதல் அளவு குறைந்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் தினசரி சராசரி 29 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது 26 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது. வரும் நாட்களில் நிலைமை மோசமாகி பால்கோவா, ஐஸ் கிரீம், பால் சார்ந்த இனிப்புகள் போன்ற பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: வெப்பத்தின் தாக்கம் காரணமாக கால்நடைகளின் பால் கறக்கும் திறன் குறைந்துள்ளது. தருமபுரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்ததால், பால் கொள்முதல் ஓரளவு குறைந்துள்ளது.

ஆனால், அட்டைதாரர்கள் மற்றும் சில்லரை நுகர்வோருக்கு பால் விநியோகம் பாதிக்கப்படவில்லை. ஏற்கெனவே சரிவை ஈடுசெய்ய தயாராகிவிட்டோம். எங்களிடம் போதுமான பால் பவுடர் கையிருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ஆவின் கால்நடை மருத்துவர் கூறுகையில், ``உள்நாட்டு இனங்களுடன் ஒப்பிடும் போது, அயல்நாட்டு மற்றும் கலப்பின கறவை மாடுகளுக்கு வெப்பத்தை தாங்கும் திறன் குறைவு. வெப்ப அழுத்தத்தின் காரணமாக, கறவை மாடுகளின் உணவு உட்கொள்ளும் அளவு கணிசமாகக் குறைந்து, அவற்றின் பால் உற்பத்திதிறனை பாதிக்கிறது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in