

கடலூர்: கடலூர் மக்களவைத் தொகுதியில் களம் காணும் பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் நேற்று குறிஞ்சிப்பாடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தம்பிப்பேட்டை, தேவநாராயணபுரம், அம்பலவாணன்பேட்டை, வழுதலம்பட்டு, குள்ளஞ்சாவடி பேருந்து நிறுத்தம், ஆயிக்குப்பம், அகரம், வன்னியர்பாளையம், கோபாலபுரம், தொண்டமாநத்தம், சம்பரெட்டிப்பாளையம், தானூர், தீர்த்தனகிரி, குண்டியமல்லூர், கொத்தவாச் சேரி, ஆடூர் அகரம் உள்ளிட்ட இடங்க ளில் கூட்டணிக் கட்சியினருடன் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வேட்பாளர் தங்கர் பச்சான் அங்கிருந்த மக்களிடம் , “இந்த கடலூர் மாவட்டத்தில் இருந்து இரு அமைச்சர்கள் சென்று, பொறுப்பில் உள்ளனர். அதிமுக, திமுக என மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்னர். இங்குள்ள பகுதி சாலைகள் தரமற்று சீர்குலைந்து உள்ளது. இது வருத்தமாக உள்ளது. ஆட்சியாளர்கள் மீது எனக்கு வருத்தம் இல்லை.
தேர்தல் எதற்காக வைக்கிறார்கள். யார் நமக்குச் செய்வார்கள்; யார் திறமை சாலி என்று பார்த்து வாக்களிப்பதற்குத் தான் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது. நமக்கானதை செய்து தராதவர்களை நாம் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
நான் வந்த ரோடு மிக மோசமாக இருந்தது; என்னால் பயணம் செய்ய முடியவில்லை. இந்த மோசமான சாலையைக் கடந்து, இந்த கிராமத் துக்குள்ளேதான் இந்த மக்கள் கிடக் கின்றனர்.
இது அநியாயம், மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மக்கள் ஊமையாக இருப்பதால் உங்கள் ராஜ்யம் நடந்து கொண்டு இருக்கிறது. பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியவர்கள், வாக்கு கேட்க வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்” என்றார். பிரச்சாரத்தின் போது பாமக மாவட்ட செயலாளர் சண்.முத்து கிருஷ்ணன், பாமக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர்.