

வேலூர்: மக்களவைத் தேர்தலில் நான் எதற்காக திமுகவுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் நேற்று முன்தினம் மேல்மொணவூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதுக் கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘புயலால் பாதிக்கப்பட்ட தமிழ் நாடு மக்களின் நிலைமையை கண்ணால் பார்க்கக் கூட வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக பல முறை தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் நிதியாக ரூ.25 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என கேட்டிருந்தார். ஆனால், அதனை தரமறுத்தது மத்திய பாஜக மோடி அரசு. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் எதற்காக பாஜக-வில் இணைந்தார் என எனக்கு தெரியவில்லை. கூட்டணி முடிவாவதற்கு முன்பு வரை அதிமுகவுடன்தான் கூட்டணி என தகவல்கள் கிடைத்தன. ஆனால், டாக்டர் அன்புமணி திடீரென பாஜகவுடன் கூட்டணியை அறி வித்தார்.
வன்னியர் சமுதாயம் உள்ளிட்ட 108 சாதிகள், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உரிமை களை பெற்றிட கடந்த 1989-ம் ஆண்டு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அந்த நன்றி உணர்வுக்குத்தான் நான் இப்போது திமுகவுக்கு வாக்குகளை கேட்டு வந்திருக்கிறேன்’’ என்றார்.