Published : 10 Apr 2024 05:42 AM
Last Updated : 10 Apr 2024 05:42 AM

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 15 சதவீத வேட்பாளர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள்

சென்னை: ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை இணைந்து தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்ட துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் சார்பில்தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நேற்றுசென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை தொடர்பாக, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கூறியதாவது: 945 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில், 135 வேட்பாளர்கள் அதாவது 15 சதவீதம் பேர் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதை தெரிவித்துள்ளனர். இதில், 81 பேர் அதாவது 8 சதவீதம் பேர், கடுமையான குற்ற வழக்குகள் உள்ளவர்கள்.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியில் 28 சதவீதம் குற்ற வழக்குகள், 15 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்டவர்களும், அதிமுக சார்பில் 35 சதவீதம் குற்ற வழக்குகள், 18 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்டவர்களும் களத்தில் உள்ளனர். பாஜக சார்பில் 70 சதவீதம் குற்ற வழக்குகள், 39 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், திமுக சார்பில் 59 சதவீதம் குற்ற வழக்குகள், 27 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், பாமக சார்பில் 60 சதவீதம் குற்ற வழக்குகள், 40 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், காங்கிரஸ் சார்பில் 78 சதவீதம் குற்ற வழக்குகள், 22 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பொருளாதார பின்னணி: வேட்பாளர்களின் பொருளாதார பின்னணியை பொறுத்தவரை 945 பேரில், 202 பேர் அதாவது 21 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். அதிமுகவின் 34 வேட்பாளர்களில் 33 பேரும், பாஜகவின் 23 வேட்பாளர்களில் 22 பேரும், திமுகவின் 22 வேட்பாளர்களில் 21 பேரும், நாம் தமிழர் கட்சியின் 39 வேட்பாளர்களில் 15 பேரும், காங்கிரஸ் கட்சியின் 9 பேரில் 8 பேரும், தேமுதிகவின் 5 பேரில் 3 பேரும், சுயேச்சைகள் 606 பேரில் 62 பேரும் கோடீஸ்வரர்கள். 950 வேட்பாளர்களில் 7 சுயேச்சைகள் உட்பட 8 பேர் தங்களுக்கு எந்த வித சொத்தும் இல்லை என தெரிவித்துள்ளனர். குறைவான சொத்து உள்ளதாக 3 சுயேச்சைகள் தெரிவித்துள்ளனர்.

42 சதவீத வேட்பாளர்கள் 5 முதல்12-ம் வகுப்பு வரை படித்தவர்களாகவும், 48 சதவீதம் பட்டதாரிகளாகவும் உள்ளனர். மேலும், 25 முதல் 40 வயதுக்குப்பட்ட வேட்பாளர்கள் 325 அதாவது 34 சதவீதமும், 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 487 அதாவது 52 சதவீதமும் உள்ளனர். 130 பேர் 61 முதல் 80 வயதுக்குள் உள்ளனர். 945 வேட்பாளர்களில் 8 சதவீதம் அதாவது 77 பேர் பெண் வேட்பாளர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x