

கோவை: சிறு, குறு தொழில் முனைவோரின் கோரிக்கைகளுக்கு பாஜக அரசு செவி சாய்க்கவில்லை என, கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசினார்.
கோவை மற்றும் பொள்ளாச்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கோவை தேர்நிலைத் திடலில் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஜனநாயகத்தை ஒடுக்குவதற்காக எதிர்க்கட்சி இல்லாத ஜனநாயகத்தை கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளை சமாளிக்க அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. பாஜகவின் கொள்கை மதச்சார்பின்மையை ஏற்றுக் கொள்வதாக இல்லை.
எனவே தான், மதச்சார்பின்மைக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்திய அளவில் குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வந்து மத அடிப்படையில் மக்களை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்து இருக்கிறது. கோவை, திருப்பூர் போன்ற சிறு, குறு தொழில்களை நம்பியுள்ள பகுதிகள் பாஜக ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தவறான ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சிறு, குறு தொழில் முனைவோரின் கோரிக்கைகள் எதற்கும் பாஜக அரசு ஒரு முறை கூட செவி சாய்க்கவில்லை. இண்டியா கூட்டணி என்பது ஜன நாயகத்தையும், மதச்சார் பின்மையையும் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாப்பதற்கு தான். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சி.பத்ம நாபன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.