

நாமக்கல்: திமுக ஆட்சியில் இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர் என திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் பேசினார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தமிழ் மணியை ஆதரித்து, மோகனூரில் நடிகை காயத்ரி ரகுராம் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் நாமக்கல்லுக்கு மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, கலைக் கல்லூரி என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் , திமுக ஆட்சியில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்குத் தாலிக்குத் தங்கம் திட்டம், திருமண உதவி திட்டம் என அனைத்தையும் நிறுத்திவிட்டனர்.
இதற்கு மாறாக டாஸ்மாக் மூலம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. பெண்களுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை ஏற்படுகிறது. திமுக ஆட்சியில் இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர். கருப்புப் பணம் தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக மற்றும் திமுகவுக்குப் பல கோடி ரூபாய் சென்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவர் காந்தி முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.