Published : 10 Apr 2024 08:34 AM
Last Updated : 10 Apr 2024 08:34 AM

காஞ்சி மக்களவைத் தொகுதியில் முக்கிய கட்சிகள் தீவிர பிரச்சாரம்: வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் முக்கிய கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

திமுக வேட்பாளருக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக கூட்டணிக்கு தேமுதிக தலைவர் பிரேமலதா, பாமக வேட்பாளருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் வேட்பாளருக்கு அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வாக்கு சேகரித்துள்ளனர்.

இந்தத் தொகுதியில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, செய்யூர், திருப்போரூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

காஞ்சிபுரம் மக்களவை தொகுதி பட்டியலினத்தவருக்கான தனித் தொகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம், உத்திரமேரூர் என இரு சட்டப்பேரவைத் தொகுதிகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவை. விவசாயிகள், தொழிலாளர்கள், பட்டு நெசவாளர்கள் இந்தத் தொகுதியில் அதிகம் வசிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திருப்போரூர் பகுதியில் வாக்கு சேகரிக்கிறார்
திமுக வேட்பாளர் க.செல்வம்.

க.செல்வம் (திமுக) - கடந்த முறை மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்ற க.செல்வம் இந்த முறையும் போட்டியிடுகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற் சங்கத்தினர் பிரச்சாரம் செய்துள்ளனர். இவருக்காக, திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர், திமுக அரசின் சாதனைகள், மகளிர் உரிமைத் தொகை வழங்கியது உட்பட பல்வேறு சிறப்புகளை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

வாலாஜாபாத் பகுதியில் வாக்கு சேகரிக்கிறார் அதிமுக வேட்பாளர் எ.ராஜசேகர்.

எ.ராஜசேகர் (அதிமுக) - அதிமுக வேட்பாளர் எ.ராஜசேகர் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இவருக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் பிரேமலதா வந்து வாக்கு சேகரித்துச் சென்றுள்ளார். கடந்த 10ஆண்டுகளில் அதிமுக அரசின் சாதனைகளையும், தற்போது திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை குறை கூறியும் வாக்கு சேகரித்து வருகிறார். காஞ்சிபுரத்தின் தீர்க்கப்படாத பிரச்சினைகளான இரட்டை ரயில் பாதை, முழு நேர முன் பதிவு மையம் ஆகியவை குறித்து பேசும் அதிமுகவினர் அவற்றைத் தீர்ப்பதாக கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஜோதி வெங்கடேசன் (பாமக) - பாஜக கூட்டணியில் பாமக சார்பில் ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவர் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இவர் திமுக, அதிமுக ஆட்சியில் நடந்த சீர்கேடுகளை மக்களிடம் எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

வாலாஜாபாத் அருகே நங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள
பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன்.

இவருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வந்து பிரச்சாரம் செய்துள்ளனர். பாஜகவினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தல் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் என்பதால் வலுவான பிரதமர் வேட்பாளர் உள்ள எங்கள் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்பது இவர்களது முக்கிய வாசகமாக உள்ளது.

வி.சந்தோஷ்குமார் (நாம் தமிழர்) - நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வி.சந்தோஷ்குமார், ``அனைவரும் கூட்டணியை நம்பி தேர்தலை சந்திக்கின்றனர், நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்'' என்று கூறி வாக்கு சேகரிக்கிறார். பெண்கள் இடஒதுக்கீடு, ஊழலற்ற நிர்வாகம் ஆகியவை பிரச்சாரத்தில் முக்கியமாக இடம் பெற்றுள்ளன.

வாலாஜாபாத் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.சந்தோஷ்குமார்.

தேர்தல் நெருங்க நெருங்க காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட சிலரும் விரைவில் பிரச்சாரத்துக்கு வர உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x